Addams, Jane
ஜேன் ஆடம்ஸ் (1860-1935)
தமிழ் விளக்கம்
ஜேன் ஆடம்ஸ் (1860-1935) - சமூகப்பணிக் கல்விக்கு அடித்தளமிட்ட முன்னோடிகளில் ஒருவர். தலைசிறந்த சமுதாய அமைப்பாளர். சமாதான ஆர்வலர். சமூகப் பணியில் சமுதாய அமைப்பு பாடமுறையைத் தோற்றுவித்தவர் என்ற பெருமைக்குரியவர். இவர் எல்லன் கேட்ஸ் ஸ்டார் என்ற பெண்மணியுடன் இணைந்து, 1889 ஆம் ஆண்டு சிகாகோ நகரத்தில் Hull House என்றழைக்கப்பட்ட சமுதாய ஊழியக் குடியிருப்புக் குழு அல்லது கூட்டுவாழ்வுக் குழுவை (Settlement House) ஆரம்பித்தார். இதுதான் அமெரிக்காவில் உருவான முதல் சமுதாய ஊழியத்திற்காக உருவாக்கப்பட்ட கூட்டு வாழ்வுக்குழு. இது மாதிரியான ஊழியர் கூட்டு வாழ்வுக் குழுக்கள் வறுமை வயப்பட்ட நகர்ப்புறச் சேரிகளில் தொடங்கப்பட்டு, அம்மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கான அனைத்துச் சேவைகளையும், சமூக மாற்றத்திற்கான உந்து சக்தியையும் வழங்கின. Hull House ஊழியர் குடியிருப்பை முன்மாதிரியாக வைத்து 1920 களில், அமெரிக்காவெங்கும் 500 ஊழியர் குடியிருப்பகங்கள் தோற்றுவிக்கப்பட்டிருந்தன. 1965 இல் Hull House அமெரிக்காவின் தேசிய வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு அருங்காட்சியகமாக்கப்பட்டுள்ளது. உலக அமைதி சாத்தியப்படவும், நல்லாட்சிகளின் முக்கியத்துவம் பற்றியும் பிரச்சாரம் செய்தார். முதலாம் உலகப் போருக்குப் பின்னர் உருவான உலக நாடுகள் அமைப்பிலும், பன்னாட்டு நீதிமன்றத்திலும் உறுப்பினராக வேண்டுமென்று அமெரிக்க அரசை வற்புறுத்தினார். 1931 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. தலை சிறந்த அமெரிக்கர்கள் பட்டியலில், சமூகப்பணியாளர்களில் இவரும், லிலியன் வால்ட் என்ற பெண்மணியும் இடம் பெற்றிருக்கின்றார்கள்.
English
(1860–1935) Considered one of the founders of social work, she was a community organizer, peace activist, and leader of the settlement house movement. With Ellen Gates Starr, she founded Hull House in Chicago, which became a prototype for other such facilities. She advocated for honest government, world peace, U.S. membership in the League of Nations and the World Court, and was co-recipient of the Nobel Peace Prize in 1931. She and Lillian Wald are the two social workers to be named to the Hall of Fame of Great Americans.