cognition

அறிதிறன், அறியும் ஆற்றல், அறிகை, அறிதல் நிலை, தெரிதல், நினைவுறல், அறிவுக்கூறு, புலனுணர்வு உட்பட்ட முழு அறிவாற்றற்கூறு

தமிழ் விளக்கம்

உடல் இயக்கத்தாலும், செயல்பாட்டாலும் ஒன்றன் பின் ஒன்றாக அதைப்பற்றிய நினைவுகள் மூளையில் பதிகிறது. அறிதிறன் அல்லது அறியும் ஆற்றல் என்பது புலனுணர்வினால் பெறப்படும் உள்ளீடுகளை (செய்திகள் / தகவல்கள்) தேவைக்கேற்றபடி மாற்றியோ, குறைத்தோ, விரிவாக்கியோ நினைவில் வைத்து (சேமித்து வைத்து) தேவைப்படும் போது பயன்படுத்திக்கொள்ளும் ஆற்றலாகும். உளவியலைப் பொருத்தவரை உணர்வுகளின் உள்ளீடுகளை தகவல்களாக மாற்றுருவாக்கி, பக்குவப்படுத்திப் பயன்படுத்தும் ஆற்றலைக் குறிக்கும். இந்த நினைவுகள் (தகவல்கள்) ஒன்றோடு ஒன்று தொடர்புடைய ஒருங்கிணைந்த நிலையிலேயே பதிகின்றன. அதாவது நமது மனதுள் ஏற்கனவே பதிந்துள்ள ஒரு நினைவைத் தொடர்புபடுத்தியே அடுத்த நினைவு பதிகிறது. ஒன்றோடு ஒன்று தொடர்புடைய ஆற்றல்களின் கோர்வையே (கட்டமைப்பு) அறிதிறன் எனப்படுகிறது. இது கண்டுணர்தலாகவும், (அடையாளம் / இனம் காணுதல், இயல்பறிதல்) அப்படிக் கண்டுணர்ந்ததைப் புரிந்து கொள்ளலாகவும், கண்டுணர்ந்ததையும் புரிந்துகொண்டதையும் நினைவு கூறலாகவும், அந்த நினைவின் அடிப்படையில் அதோடு தொடர்புடையவற்றோடு இணைத்துக் கண்டுணர்ந்ததை, புரிந்ததை, நினைவை மதிப்பீடு செய்தலாகவும் பரிணாமம் கொள்கின்றன. இந்த ஒருங்கிணைந்த ஆற்றலையே அறியும் ஆற்றல் என்கிறோம். அறிவு என்றால் மனிதனுள் இருக்கும் நினைவு மட்டுமே அல்ல. அது பல ஆற்றல்களின் ஒருங்கிணைந்த கட்டமைப்பாகையால் இதை அறியும் ஆற்றல் என்கிறோம். இதன் தொடக்கப்புள்ளி புலன்களாகையால் இதைப் புலனுணர்வு என்றும் கூறுவர். அறிதிறன் அல்லது அறிதிறச் செயல்முறை இயற்கையானதாகவோ செயற்கையாகவோ, தன்னுணர்வு கொண்டதாகவோ, தன்னுணர்வு அற்றதாகவோ இருக்கலாம். இதனால், இவை நரம்பியல், உளவியல், தத்துவம், கணினி அறிவியல் போன்ற துறைகளில், பல்வேறு நோக்குகளிலும், சூழல்களிலும் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. அறிதிறன், பண்பியற் கருத்துருக்களான மனம், தர்க்க அறிவு (ஏரணம்), நோக்கு (perception), நுண்ணறிவு (intelligence), கற்றல் முதலியவற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள அறிதிறன், மனித மனத்தின் பெருமளவு வல்லமைகளைக் குறிப்பதுடன், செயற்கை நுண்ணறிவுக்கு இருக்கவேண்டிய இயல்புகளையும் குறிக்கின்றது. அறிதிறன், உயர்நிலை உயிரினங்களில் காணப்படும் பண்பியல் (abstract) இயல்பாகும். இதனால் இது மூளையின் அல்லது பண்பியல் நிலையிலான மனத்தின் நேரடியான இயல்பாகக் குறியீட்டு நிலையில் ஆய்வு செய்யப்படுகின்றது.

English

The mental process of recognizing, understanding, remembering, and evaluating relevant information.