coma

உணர்விழந்த முழு மயக்க நிலை

தமிழ் விளக்கம்

ஆழ்மயக்கம் (கோமா) என்பது வலியை ஏற்படுத்தும் தூண்டல்களுக்கோ, ஒளி, அல்லது ஒலிக்கோ எந்த ஒரு எதிர்வினையும் காட்டாமல் இருப்பதுடன், தன்னிச்சையாக எந்தவொரு இயக்கத்தையோ / செயலையோ செய்ய முடியாமல், சாதாரணமாக உறங்கி, விழித்திருக்கும் வட்டத்தை இழந்து, ஆறு மணி நேரத்திற்கும் மேலாக, உணர்வுகளை இழந்து, விழித்தெழ முடியாத நிலையில் தொடரக்கூடிய ஒரு மருத்துவ நிலைமையைக் குறிக்கும். இருப்பினும், கிளாஸ்கோ ஆழ்மயக்க வரையறையின்படி (Glasgow Coma Scale), குழப்பத்திலுள்ளவர்களையும் மிதமான ஆழ்மயக்கத்தில் உள்ளவர்களாகக் கொள்ளலாம். இந்த ஆழ்மயக்கமானது, உணர்விழந்த நிலை, உணர்விழந்த மயக்க நிலை, செயலிழந்த மயக்க நிலை, நினைவற்ற நிலை எனப் பலவகையாக அழைக்கப்படும். இது ஆங்கிலத்தில் பொதுவாகக் கோமா (Coma) என அழைக்கப்படும்.
ஆழ்மயக்கமானது மைய நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் பல்வேறு காரணங்களால் ஏற்படும். விதிமுறைகளை மீறிய, தவறான போதைப்பொருள் பாவனை, தவறான அல்லது அளவுக்கதிகமான மருந்துகளின் பாவனை போன்றவற்றால் ஏற்படும் நச்சூட்டுப் பாதிப்பு, வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் அசாதாரண நிலைகள், மைய நரம்பு மண்டல நோய்கள், பக்கவாதம், குடலிறக்கம், இரத்தச் சர்க்கரைக் குறைவு போன்றவற்றால் ஏற்படும் தீவிரமான நரம்பியல் பாதிப்புகள், வாகன விபத்து, உயரத்திலிருந்து விழுதல் போன்ற நிலைமைகளில் ஏற்படும் பேரதிர்ச்சிப் பாதிப்புகள் போன்றன ஆழ்மயக்கத்திற்கான காரணங்களாக அமைகின்றன. சிலசமயம், மூளையில் பேரதிர்ச்சி ஏற்பட்ட நிலையில், மூளையின் தொழிற்பாட்டைப் பாதுகாப்பதற்காகவும், சில நோய் நிலைகள், அல்லது காயங்களின் தாக்கத்தால் ஏற்படும் வலி அதிகமாக இருக்கும் வேளையில், அளவுக்கு மீறிய வலியிலிருந்து நோயாளியைப் பாதுகாப்பதற்காகவும், சில மருத்துவ சிகிச்சை முறைகளின் தீவிரத்தன்மையை நோயாளி தாங்க முடியாது போகும் என்றிருக்கும் போதும், திட்டமிட்டு, சில குறிப்பிட்ட மருந்துகளைப் பயன்படுத்தி, இவ்வகையான ஆழ்மயக்கத்திற்கு நோயாளி கொண்டு செல்லப்படுவதும் உண்டு.

English

A medical condition characterized by unconsciousness with complete absence of all voluntary activity.