death

இறப்பு, மரணம், மனித உடலில் முக்கியமான செயல்பாடுகள் நின்றுபோகும் நிலை, அளவிடக்கூடிய மூளை அலைகள் இல்லாத நிலை

தமிழ் விளக்கம்

மருத்துவ அறிவியலின்படி மரணம் என்பது உடலிலுள்ள உயிர்ச் செல்களின் இயக்கமின்மை என்று வரையறுக்கலாம். இது உயிரினங்களின் உடலில் முக்கியமான செயற்பாடுகள் நிரந்தரமாக நின்றுவிடுவதைக் குறிக்கும். நவீன அறிவியலின்படி இந்நிகழ்வு அவ்வுயிரினத்தின் முடிவு ஆகும். முக்கிய உறுப்புக்கள் இயக்கமின்றி செயலற்றுப் போவதையே நாம் மரணம் என்று கூறுகின்றோம். மருத்துவ அறிவியலில் மரணத்தை இருவகையாக 1. மருத்துவச் சாவு (Clinical death ) 2. மூளைச் சாவு (Cerebral death ) என்றும் குறிப்பிடுகின்றார்கள். 1.மருத்துவச் சாவு என்பது பல்வேறு காரணங்களினால் இதயம் இயங்காது நின்று போவதாகும். அப்போது இதயத் துடிப்பு சிறிதும் இல்லாதிருக்கும். எலெக்ட்ரோ கார்டியோ கிராமில் (electro cardiogram ) பதிவு செய்ய இதயத்தின் இயக்கம் தொடர்பான சமிக்கை அலைகள் வெளிப்படுவதில்லை.
2. மூளைச் சாவு - மனித மரணத்தை ஆய்வு செய்த உடற்கூறு வல்லுனர்கள், இதயம் நின்று விட்டாலும் அரை மணியிலிருந்து 2 மணி நேரம் வரை மூளை தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறதென்றும், இதை எலெக்ட்ரோ என்சிபலோகிராமில் (electro encephalogram ) பதிவு செய்யமுடியுமாகையால், அது மூளை உயிருடன் இருப்பதைக் காட்டுவதாகச் சொல்கிறார்கள். இக்கால வரம்பிற்குப் பிறகு மூளையும் இயக்கமற்று செயலிழந்து விடுவதால், மூளையிலிருந்து சமிக்கை அலைகள் வெளிப்படுவதில்லை. இதை மூளைச் சாவு என்கிறார்கள். மூளைச் சாவே ஒரு மனிதனின் முடிவான சாவாகும். ஏனெனில் இதற்குப் பிறகு உயிரை மீட்டுப் பெறவே முடியாது.
மரணம் தமிழில் வெவ்வேறு வார்த்தைகளில் குறிக்கப்படுகின்றது. மரணம், இறப்பு, மறைதல், வைகுண்ட, சிவலோக பதவி அடைதல், சாதல், உயிர் நீத்தல், கண்மூடுதல், போய்ச் சேர்தல், நட்டுகிடுதல், நாண்டுகிடுதல், புட்டுகிடுதல், மண்டயப் போடுதல், தவறுதல், டிக்கெட் வாங்குதல் என்றும் குறிக்கின்றார்கள். மதப் பண்பாட்டில் பிறந்த சொற்களையெல்லாம் தவிர்த்து தந்தை பெரியார் உயிர் நீத்தார், பிரிந்துவிட்டார், மறைந்துவிட்டார், ஆவி நீத்தார், முடிவெய்தினார், இயற்கை எய்தினார் என்று குறித்தார்.
பல மதங்களும், அவை சார்ந்த மெய்யியலும்; உயிரும், உடலும் வெவ்வேறானவை என்றும், வாழும் உயிரினத்தின் உடலுக்குள் இருக்கும் உயிர் உடலைவிட்டு நீங்கும் போது இறப்பு ஏற்படுவதாகவும் கூறுகின்றன. இறப்பின் போது உடலைவிட்டு நீங்கும் உயிர்கள் மீண்டும் இன்னொரு உடலுடன் பிறப்பதாகச் சில மதங்கள் நம்புகின்றன. இது மறுபிறப்பு எனப்படுகின்றது.

English

The total and permanent cessation of vital functions; currently, in humans, the determining factor is the absence of measurable brain waves.