disaster
சேதம் பேரழிவு, பெருங்கேடு; துன்ப நிகழ்வு, பேரிழப்பு, நாசம், பேராபத்து, கெடுதி
தமிழ் விளக்கம்
இயற்கையாகவோ, மனிதனின் கவனக்குறைவினாலோ, சுயநல அல்லது தீவிரவாதச் செயல்களாலோ, ஒரு குறிப்பிட்ட இடத்தை, குறிப்பிட்ட நேரத்தில் குறி வைத்து, உடமைகளுக்குச் சேதம் விளைவித்து, மனித வாழ்விற்கும், ஆரோக்கியத்திற்கும் தீங்கிழைத்து, சமூக நிறுவனங்கள் / அமைப்புகளின் அத்தியாவசியச் செயல்பாட்டை சீர்குலைக்கும் எதிர்பாராத அல்லது அசாதாரண நிகழ்ச்சியை பேரிடர் என்கிறோம். பஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் போன்றவைகள் மூலம் ஏற்படும் பேரழிவுகளை இயற்கைப் பேரழிவுகள் என்று சொல்லலாம். நிலத்தின் சீற்றம், நில நடுக்கம் மற்றும் பூகம்பமாகவும், நீரின் சீற்றம் வெள்ளமாகவும், நெருப்பின் சீற்றம் எரிமலையாகவும், கானகத் தீ ஆகவும், ஆகாயத்தின் சீற்றம் ஓசோனில் ஓட்டையாகயாகவும், காற்றின் சீற்றம் புயலாகவும் மாறி பேரழிவை ஏற்படுத்துகின்றன. அறிவியல் வளர்ச்சி காரணமாக மனிதன் நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் வானம் ஆகியவற்றைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டதன் விளைவாக, மனிதத் தவறுகள் மற்றும் கவனக்குறைவுகளால் தீ விபத்து, சாலை விபத்து, கட்டிட விபத்து, கப்பல், படகு விபத்துகள், மின்சார விபத்துகள், ஆகாய விமான விபத்துகள், தீவிரவாதத்தால் ஏற்படும் போர், வெடிகுண்டு அணுகுண்டு மற்றும் ஏவுகணைகள் பயன்பாட்டினால் ஏற்படும் விளைவுகள் போன்றவற்றால் பொருளாதார மற்றும் உயிர் இழப்புகள் ஏற்படுகிறது... இவையாவும் மனிதனால் ஏற்படும் பேரிடராகும். பேரழிவு நிர்வகித்தல் என்பது பேரழிவைத் தவிர்ப்பதற்கு எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆகும். பேரழிவு ஏற்படுவதற்கு முன்பு அதை எதிர்கொள்வதற்கு எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கையே இப்பணியாகும். பேரழிவுக்கு எதிரான நடவடிக்கை (எ.கா., அழிவு ஏற்பட இருக்கும் பகுதியை அவசரமாகக் காலி செய்தல், தொற்றுநோய் பரவாமல் தடுத்தல், தூய்மை செய்தல் மற்றும் பல), இயற்கையாலோ அல்லது மனிதர்களாலோ உருவாக்கப்பட்ட பேரழிவுகளுக்குப் பின்னர் சமுதாயத்தை மறுசீரமைத்தல் போன்றவையும் இப்பணியில் மேற்கொள்ளப்படுகிறது. அவசரநிலை நிர்வகித்தல் என்பது இடர்பாடுகளின் விளைவாய் ஏற்படும் பேரழிவுகளின் பாதிப்புகளைச் சீர்படுத்தவோ அல்லது தவிர்க்கவோ தனிப்பட்ட நபர்களாலோ, குழுவாகவோ அல்லது சமுதாயத்தினர்களாலோ தொடரப்படும் செயல்பாடாகும். அழிவு ஏற்பட்ட பகுதியைப் பொறுத்து நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன சர்வதேச பேரிடர் துயர் குறைப்பு நாள் ஆண்டுதோறும் அக்டோபர் 12-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் தேசியப் பேரிடர் துயர் குறைப்பு நாள் அக்டோபர் மாதம் கடைசி புதன்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் 2001 இல் புஜ் பகுதியில் நிகழ்ந்த பூகம்பத்தில் 13,805 பேர் உயிரிழந்தனர். 2004-இல் நிகழ்ந்த சுனாமிப் பேரலையால் 10,749 பேர் மாண்டனர். 5,640 பேர் காணாமல் போயினர். ஒரிசாவில் நிகழ்ந்த சூப்பர் சூறாவளியில் 9,893 பேர் இறந்தனர். உலக வங்கி (2003-ஆம் ஆண்டு) நடத்திய ஆய்வில் இயற்கைப் பேரழிவுகள் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சிப் பாதைக்கு தடைக்கல்லாக இருந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.
English
An extraordinary event, either natural or human-made, concentrated in time and space, that often results in damage to property and harm to human life or health and that is disruptive of the ability of some social institutions to continue fulfilling their essential functions.