ecology

சூழலியல், சூழ்நிலையியல், உயிரின வாழ்க்கையை ஆய்தல், தாவரங்கள், விலங்குகள் போன்றவற்றின் வாழ்க்கைச் சூழல் ஆய்வுநூல், பரிசர சாஸ்திரம்

தமிழ் விளக்கம்

சூழலியல் (Ecology) என்பது உயிர் வாழ்க்கையின் பரவல் பற்றியும், உயிரினங்களுக்கும் அவற்றின் இயற்கைச் சூழலுக்கும் இடையிலான இடைவினைகள் பற்றியும் அறிவியல் அடிப்படையில் ஆய்வு செய்யும் துறையாகும். ஒரு உயிரினத்தின் சூழல் என்பது சூரிய ஒளி, காலநிலை, நிலவியல் அம்சங்கள் போன்ற உயிரற்ற காரணிகளின் ஒட்டுமொத்த அளவான இயற்பியல் இயல்புகளையும், குறிப்பிட்ட வாழிடத்தில் வாழும் பிற உயிரினங்களைக் கொண்ட உயிர்சார் சூழல் மண்டலத்தையும் (ecosystem) உள்ளடக்கியதாகும். சூழல் என்பது தாவரங்கள், விலங்குகள் அடங்கிய அனைத்து உயிரினங்களுடன், அவற்றுடன் தொடர்பு கொண்டிருக்கும் அனைத்து இயற்பியல் கூறுகளையும் அடக்கியதாகும். இவைகளுக்கு இடையே தொடர்புகள், பரிமாற்றங்கள் அல்லது இடைவினைகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பதைப் பற்றிக் கற்றுக்கொள்ளுவதே சூழலியல் ஆகும். சூழலியல் தனது ஆய்வுகளுக்காக, நிலவியல், புவியியல், காலநிலையியல், மண்ணியல், மரபியல், வேதியியல், இயற்பியல் ஆகிய துறைகளையும் துணையாகக் கொள்கின்றது. இதனால் சிலர் இதனை ஒரு முழுதளாவிய (holistic) அறிவியல் என்கின்றனர்.
சூழலியல் என்னும் கருத்துருவை முதன் முதலில் ஜெர்மானிய உயிரியலாளரான ஏர்ன்ஸ்ட் ஹேக்கல் (Ernst Haeckel) என்பவர் 1869 ம் ஆண்டு பயன்படுத்தினார். சூழலியல் என்பது உயிரினங்கள் சூழலுடன் கொள்ளும் தொடர்பு பற்றிய விரிவான அறிவியல் என வரையறுத்தார். எனினும் இவர் இக் கருத்துருவை விரிவாக விளக்கவில்லை.
1895 இல் இது தொடர்பான விரிவான பாட நூல் ஒன்றையும், இத்துறையில் பல்கலைக்கழகப் பாடநெறி ஒன்றுடன் சேர்த்து எழுதியவர் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த தாவரவியலாளரான இயுஜெனியஸ் வார்மிங் (Eugenius Warming) என்பவராவார். இதனால் இவரே சூழ்நிலையியலை நிறுவியவர் என்கின்றனர். பின்னர் இவரைத் தொடர்ந்து இச்சொல்லைத் தாவரவியல் மற்றும் விலங்கியல் அறிஞர்கள் பயன்படுத்தத் தொடங்கினர்.
சூழலியல் என்பதைச் சுட்டும் ஈக்காலாஜி (Ecology ) என்னும் ஆங்கிலச் சொல் ஓய்கோஸ் (oikos) என்னும் கிரேக்க வார்த்தையில் இருந்து பெறப்பட்டதாகும். (Greek: οἶκος, 'house'; -λογία, 'study of') இதன் பொருள் வீடு அல்லது நிலையம் என்பதாகும்.

English

The study of relationships between environment and organisms.