epidermis

மேல்தோல், புறத்தோல், மேல்புறத்தோல்

தமிழ் விளக்கம்

உடலில் பெரிய அவயம் தோல். நம் உடலை மூடியிருக்கும் சருமமே வெளியிலிருந்து கிருமிகள் உடலை தாக்குவதையும், சூரிய ஒளி உடலின் உள் அவயங்களைத் தாக்காமலும் பாதுகாக்கிறது. தோல் உடல் உஷ்ணத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றது. வெயிலினால் ஏறும் அதிக உடல் சூட்டை, சருமம் விரிவடைந்து, வியர்த்து உஷ்ணத்தை வியர்வையாக வெளியேற்றுகிறது. குளிர் தாக்கும் போது தோல் சுருங்கி, தனது நுண்ணிய துவாரங்களை மூடி, உடல் சூட்டை வெளியேறாமல் தடுக்கிறது. உடலின் நீர்மச் சத்துக்களை சரியான அளவில் வைக்கிறது. உடலிலிருந்து தேவையில்லாத நீரை வெளியேற்ற சிறுநீரகத்திற்கு உதவுகிறது. முக்கியமாக, சருமம் தொடு உணர்ச்சியை உணர வைக்கிறது. வலியையும், இன்பத்தையும் உணர வைக்கிறது. உடலில் உள்ள “வாசனைச் சுரப்பிகள்” பாலியல் உணர்வைத் தூண்டுகின்றன. சருமமே ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் தனித்துவ புறத்தோற்றத்தை அளிக்கிறது. ஒரு சராசரி மனித உடலில் சருமத்தின் பரப்பளவு 18 சதுர அடி. மனிதனின் எடையில் 10% சருமத்தின் எடையாகும். மேல் தோல் செல்கள் 30 நாட்களுக்கு ஒரு முறை புதிதாக உருவாகின்றன. சருமம் மூன்று அடுக்குகளால் ஆனது அவை. 1. மேல் தோல் (அ) புறத்தோல் 2. அடித்தோல் 3. ஹைப்போடெர்மிஸ் (அ) தோல் கீழ் அடுக்கு (அ) கொழுப்புத் தோலடுக்கு.
மேல் தோல் (புறத்தோலை) தண்ணீர் தாக்க முடியாது. இது தான் பாக்டீரியா, வைரஸ், இதர கிருமிகள் உடலுக்குள் நுழையாமல் தடுக்கிறது. உள் உறுப்புகளையும், அடி, காயங்களில் இருந்து பாதுகாக்கிறது. தட்டையான புறத்தோல் செல்கள் ‘கெராடின்’ எனும் புரதத்தால் ஆனவை. இதே கெராடின்தான் நம் முடியிலும், நகங்களிலும் உள்ளது. புறத்தோலின் செல்கள் பழையதாக நலிந்து போகும். அப்போது புதிய செல்கள் கீழிருந்து மேலே எழும்பி வந்து, பழைய செல்களை வெளியேற்றும்.
மேல் தோலின் கீழ்ப்பகுதியில் உள்ள ‘மெலானோசைட்ஸ்’. செல்கள் தான் நமது உடலுக்கு நிறத்தைக் கொடுக்கும் மெலானின் என்ற சாயப் பொருளை உற்பத்தி செய்கின்றன. நம் உடலுக்கு நிறம் கொடுப்பது மட்டுமன்றி, தீங்கு விளைவிக்கும் அல்ட்ரா – ஊதா வெப்பக் கதிர் வீச்சை (இது சூரிய ஒளியிலிருந்து வரும்) மெலானின் தடுக்கிறது. அதிகப் பாதுகாப்பு தேவைப்படும் இடங்களில் மேல்தோல் சற்று தடிமனாக இருக்கும். – உதாரணம் உள்ளங்கை, பாதம். மேல் தோலில் ‘லாங்கர் ஹான்’ செல்களும் உள்ளன. இவை தோலின் நோய் தடுப்புச் சக்தியின் அங்கங்களாகும். இது உடலில் உண்டாகும் பாதிப்புகளை “ஒவ்வாமை” யாகக் காட்டும்.

English

The outer layer of the skin.