ethics

ஒழுக்கவியல், அறவியல் நல்வழி, நன்னெறிக் கோட்பாடுகளின் தொகுதி, மனிதப்பண்பாடு நடத்தைகள் பற்றி ஆராயும் மெய்விளக்கத்துறை, நடத்தை மற்றும் ஒழுங்கு முறை பற்றிய முழுப் பரப்பாய்வியல், தொழில் கோட்பாடுகள்

தமிழ் விளக்கம்

அறம் என்றால் என்ன? என்ற வினா எழுப்பினால் அதற்கு விடை காண்பது கடினமானது. ‘அறு’ என்ற வினைச்சொல் அடியாகப் பிறந்ததே ‘அறம்’ என்னும் சொல். இச்சொல்லுக்கு அறுத்துச் செல், வழியை உண்டாக்கு, உருவாக்கு, துண்டி, வேறுபடுத்து என்ற பலவகைப் பொருள்கள் வழங்கி வருகின்றன. இத்தகைய சொல் ஆராய்ச்சியின் அடிப்படையில் அறம் என்னும் சொல்லிற்குப் பின்வருமாறு விளக்கம் கூறலாம்.
மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுதியே அறம் என்று கூறுவர். ‘பிறவிதோறும் மனிதனைப் பற்றிக் கொண்டு வரும் தீவினையை அறுத்தெறிவதே அறம்’ என்ற ஆன்மீக விளக்கமும் இதற்குத் தரப்படுவதுண்டு.
நம் முன்னோர் அறம் என்னும் சொல்லிற்குத் தந்துள்ள விளக்கத்தோடு எதிக்ஸ் (Ethics) என்னும் ஆங்கிலச் சொல்லிற்குத் தரப்படும் பொருள் விளக்கம் மிகவும் பொருந்துவதாக உள்ளது. நல்ல அல்லது தீய செயல்கள் மூலம் வெளிப்படும் மக்களுடைய நடத்தையைப் பற்றிய ஆய்வியல் கலையே ‘எதிக்ஸ்’ என்பதாகும். இதைத் தமிழில் அறவியல் எனலாம்.
எதிக்ஸ் என்னும் சொல் கிரேக்க மொழிச் சொல்லாகும். முதன் முதலில் இச்சொல் பழகிப்போன நடத்தை, வழக்கம், மரபு என்னும் பொருள்களையே உணர்த்தி வந்தது. பின்னர் நடத்தை என்னும் பொருளே போற்றப்பட்டது. ஒழுக்கத்தைக் குறிப்பிடும் Moral என்னும் ஆங்கிலச் சொல்லும் பழக்க வழக்கம் என்னும் பொருளையே குறித்தது. இதனால் மனித நடத்தை குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தில் வாழும் மக்கள் வழக்கமாகக் கொள்ளும் முடிவையே ஒழுக்கமாகக் (Morality) கொண்டனர் என்பது புலனாகின்றது.
இதனால் தனி மனித நடத்தை பெரும்பாலோரால் பின்பற்றப்பட்ட பொழுது ஒழுக்கமெனும் பண்பாக மலர்ந்து வாழ்க்கை நெறியாக மாண்புற்றது எனலாம்.
அறம் என்பது செயலா, சொல்லா, எண்ணமா என்று ஆராய முற்பட்டால், வள்ளுவர் சொல்லிய மாதிரி 'அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்' அறம் என்பது எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும் சேர்ந்த ஒன்று என்று கொள்ளலாம். இத்தகைய அறம் பற்றிப் பேச எழுந்தவையே அறநூல்கள்.
அறவியல் தமிழ்க் கலாச்சாரப்படி இல்லறம், துறவறம் என்று பிரிக்கப்படுகின்றது. இல்லறம் என்றால் இயல்பான வாழ்வை சமூக இயக்கத்துடன் பிணைத்துக்கொண்டு, அதிகபட்ச ஒத்திசைவுடன் வாழ்தல். துறவறம், வாழ்வை அறியும் பொருட்டு தன்னை முன்நிபந்தனைகள் இல்லாதவனாக வைத்துக்கொள்ளுதல்

English

A system of moral principles and perceptions about right versus wrong and the resulting philosophy of conduct that is practiced by an individual, group, profession, or culture. See also code of ethics.