fascism

கொடுந்தேசியவாதம், கொடுந்தேசியம், எல்லா அதிகாரங்களும் கொண்ட அரசு

தமிழ் விளக்கம்

ஒரு அரசாட்சி முறை (தற்கால வழக்கில் இழிசொல் ஆகிவிட்டது). மொத்த அதிகாரத்தையும் அரசு தன்னிடம் வைத்துக் கொள்ளுதல், வர்த்தக நிறுவனங்களோடு இணைந்து நாட்டின் பொருளாதாரத்தையும், உள்நாட்டு சந்தையையும் கட்டுப்படுத்துதல், ஒரே ஒரு தலைவரின் பிம்பத்தைப் போற்றி அவரைத் தனியதிகார மையமாகக் கொள்ளுதல், அரசியல் எதிர்ப்பினையும் விமர்சனத்தையும் சகித்துக் கொள்ளாமல் நசுக்குதல், ஒரு கட்சி அரசியல் கொள்கை போன்றவை பாசிச அரசுகளின் பண்புகள்.
பாசிசம் என்பது தனி மனிதரைவிட நாடும் இனமும் மேலானதென்றும், சர்வ அதிகாரம் படைத்த ஒரு எதேச்சாதிகாரியின் ஆளுகையின் கீழ் மையப்படுத்தப்பட்ட சர்வாதிகார அரசும், கடுமையான சமூகப் பொருளாதாரக் கட்டுப்பாடுகளையும், எதிர்ப்பிற்கெதிரான பலாத்கார அடக்கு முறைகளையும் நியாயப்படுத்துகின்ற அரசியல் சமூகப் பொருளாதாரக் கருத்தாக்கம். தனிமனித உரிமைகளை நாட்டு நலனுக்காக, வல்லமைக்காக எனக் கூறி மதிக்காமல், அரசுக்கு எதிராகக் கேள்வி கேட்பவர்களை அடக்குமுறைகள் மற்றும் வன்முறை மூலம் நசுக்குகின்ற அரசியல் நடைமுறை. நாடு, இனப்பெருமை பேசுவதால் ஆரம்ப கட்டங்களிலே அடிமட்ட மக்களின் ஆதரவும் இவ்வதிகார வர்க்கத்திற்கு கிடைக்கும்.
தனியுரிமை மற்றும் முதலாளித்துவத்தின் தேய்ந்த நிலையே பாசிசம் என்றும், தனியுரிமை, முதலாளித்துவம் கையாலாகாத நிலையில் பாசிசத்தைச் சரணடைகின்றது என்றும் கூறுவர்.
அரசின் மகிமைக்காகத் தன்னுடைய எல்லாவற்றையும் அதற்கு அர்ப்பணம் செய்ய வேண்டுமென்ற அடிப்படையிலே தான் பாசிச இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. பாசிசம் முதலாம் உலக மகா யுத்தத்தின் போது இத்தாலியில் தோன்றியது. முசோலினியின் இத்தாலி, இட்லரின் ஜெர்மனி பாசிசத்திற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். 1920 களில் துவங்கி 1943 வரை இத்தாலி நாட்டில் ஆட்சிப் பொறுப்பிலிருந்த சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினியின் கட்சியின் பெயரே பாசிஸ்டுக் கட்சி. பின் அதன் பண்புகளைப் பெற்றிருந்த பிற ஆட்சிகளும், கட்சிகளும் பாசிஸ்டுகள் என்றே வழங்கப்படுகின்றன. 1945ல் பாசிச அரசுகள் இரண்டாம் உலகப் போரில் தோற்ற பின்னர் பாசிசமும், பாசிஸ்டுகளும் இழி சொற்களாகி விட்டன. இடதுசாரி, வலதுசாரி என்று கொள்கைப் பாகுபாடின்றி அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் தங்கள் போட்டியாளர்களைத் தூற்ற இந்தச் சொல்லைப் பயன்படுகின்றன.
பாசிஸ் என்பது ரோமானியப் பேரரசின் நீதிபதிகள், இறுக்கமாகக் கட்டப்பட்ட உருட்டுக் கட்டைகளுக்கு (well tied bundle of nods) நடுவே கோடாரி (Axe) சொருகப்பட்டிருக்கும் ஒரு ஆயுதத்தை அடையாளமாக வைத்திருப்பார்கள். இந்த ஆயுதம் பாசிஸ் (Fasci) எனப்படும். புராதன உரோமானிய இராணுவத்தினால் பயன்படுத்தப்பட்ட கோடரிச் சின்னமே பாசிச இத்தாலிய இராணுவத்தின் சின்னமாகப் பயன்படுத்தப்பட்டது.
பாசிச தத்துவத்தின் மூலங்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தீவிர தத்துவங்களிலிருந்து பெறப்பட்டதாகும். எடுத்துக்காட்டாக நீட்சேயின் (Nietzsche) அதிமானுடன் (Superman) என்ற அதிகாரக் கோட்பாட்டினாலும், சொரல் (Sorel) இன் பலாத்காரக் கோட்பாட்டினாலும், ஹெகல் (Hegel) இன் அரசை மேம்படுத்தும் வாதங்களினாலும் பாசிசம் பெருமளவிற்கு வளர்ந்திருந்தது அத்துடன் மாக்கியவல்வியின் கருத்துக்களும் பாசிசச் சிந்தனை உருவாகக் காரணமாயிருந்தன.

English

A political ideology and party that advocates a totalitarian structure of governance, extreme nationalism under a charismatic dictator, high favor for private capitalism, a regimented populace devoted to social productivity, and sanctions against individuals who are considered less economically productive or responsible for economic problems. Benito Mussolini and Adolf Hitler espoused this ideology.