feminism

பெண் உரிமை ஏற்புக்கோட்பாடு, பெண்ணுரிமை ஆதரவு, பெண்ணியம்

தமிழ் விளக்கம்

Feminism என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக வழங்குவது பெண்ணியம் என்ற சொல்லாகும். இதனையே சிலர், ‘பெண்ணிலை வாதம்’ என்றும் சொல்லுவர். பெண்ணின் நிலையிலிருந்து கருத்துக்கள் அல்லது வாதங்களை எழுப்புவது பெண்ணியவாதம் ஆகும். பெண்ணியம் என்பது பெண்களைத் தாழ்வுபடுத்தும் சமூக, அரசியல், பொருளாதார நடைமுறைகள், கட்டமைப்புக்கள் மற்றும் சமத்துவமின்மையை உலகின் கவனத்திற்குக் கொண்டுவர முயலும், சமூக, கலாசார, அரசியல் இயக்கங்கள், செயற்பாடுகள், கோட்பாடுகளின் தொகுப்பாகும். ஆண் பெண் சமத்துவத்தில் கவனம் செலுத்தும் கோட்பாடாகவும் இது வரையறுக்கப்படுவதுண்டு. பெண்ணியம் சார்ந்து இயங்கும் சக்திகளின் சமூக, அரசியல் கோட்பாட்டுச் சார்பு நிலைகளைக் கொண்டு பெண்ணியம் பல வகைப்பாடுகளுள் அடக்கப்படுகிறது. பொதுவாக இதை மூன்று நிலைகளாகப் பிரிப்பார். 1. முதல் அலைப் பெண்ணியம் என்பது பெண்ணிய இயக்கத்தின் முதற்கட்ட காலகட்டத்தைக் குறிக்கிறது. 19 ம் நூற்றாண்டிலும் 20 ம் நூற்றாண்டிலும் ஐக்கிய அமெரிக்காவிலும், ஐக்கிய இராச்சியத்திலும் பெண்களின் அரசியல் உரிமைகளை, குறிப்பாக பெண்களின் வாக்குரிமை, சொத்துரிமை போன்றவற்றை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் முதல் அலை பெண்ணியமாகக் கருதப்படுகிறது. 2. இரண்டாம் அலைப் பெண்ணியம் என்பது மறைவாக இருக்கும் பெண் ஒடுக்குமுறைகளை, குறிப்பாக பாலியல், குடும்பம், வேலை போன்ற தளங்களில் பெண்களுக்கு இருக்கும் தடைகளைத் தகர்பதற்கான 1960 தொடங்கி 1970 வரை ஐக்கிய அமெரிக்காவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களைச் சுட்டுகிறது. பெண்களின் இனப்பெருக்க உரிமைகள் இதில் ஒரு முக்கிய கூறு ஆகும். இந்தக் கால கட்டம் பாலியல், ஆபாசம் தொடர்பான பெண்ணிய உட்கருத்து வேறுபாட்டுடன் முடிவுக்கு வந்தாகப் பல பெண்ணியவாதிகள் கருதுகிறார்கள். 3. மூன்றாம் அலைப் பெண்ணியம் என்பது 1980 களுக்குப் பின்னரான பல வகைப்பட்ட பெண்ணியச் செயற்பாடுளைக் சுட்டுகிறது. இந்த இயக்கம், இரண்டாம் அலைப் பெண்ணியத்தின் தோல்விகளாக கருதப்பட்டவற்றில் இருந்து எழுந்தது. பெண்கள் 'பல நிறத்தவர்கள், இனத்தவர்கள், நாட்டவர், சமயத்தவர், பண்பாட்டுப் பின்புலத்தைக் கொண்டவர்கள்' என்ற உணர்தலை அடிப்படையாகக் கொண்டது.

English

The social movement and doctrine advocating legal and socioeconomic equality for women. The movement originated in Great Britain in the 18th century. See also women's liberation movement.