group work

சமூகக்குழுப்பணி

தமிழ் விளக்கம்

மனிதர்கள் தனித்தில்லாமல் மற்றவர்களுடன் இணைந்திருப்பதன் மூலமே அவர்கள் மனதாலும், உடலாலும் பரிமளிக்கின்றார்கள் என்பது அறிவியல் பூர்வமான உண்மை மட்டுமல்ல அது நடைமுறை உண்மையும் கூட. மனிதர்களை மற்றவர்களுடன் இணைப்பதன் மூலம் அவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொணர வைத்து அவர்களின் சமூகப்பங்களிப்பை மேம்படுத்தமுடியும் என்பது சமூகக் குழுப்பணியின் நம்பிக்கை. இரண்டோ அல்லது இரண்டிற்கு மேற்பட்ட நபர்களுடனோ இணைந்து அவர்களின் சுயமேம்பாட்டிற்காவும், அவர்களின் சமூகச் செயல்பாடுகளை செழுமையாக்கவும், பிறருடனான அவர்களின் உறவுமுறைகளில் ஏற்படும் குறைகளைக் களைந்து, அவர்களை சமூகத்திற்கு இணக்கமான நடத்தைகளைப் பின்பற்றக் கொடுக்கப்படும் பயிற்சி. சமூகத்திற்கு இணக்கமாக நடக்கமுடியாமல் தடை செய்யும் சமூக உளவியல் காரணங்களைக் களைய குழுப்பணி உதவுகிறது. சமூகக் குழுப்பணி குழு என்பது அக்குழுவிலுள்ள தனிநபரும், ஒட்டுமொத்தக் குழு மற்றும் குழுக்கட்டமைப்பும் ஒன்றின்மீது இன்னொன்று பரஸ்பர தாக்கங்களை ஏற்படுத்தும் இருவழிப் பயணமாகி, செயல்நோக்கம் நிறைவேறவும் (task goals including social goals - citizen education groups), உளச்சிக்கல்களுக்கு சிகிச்சை பெறவும் (remedial goals - treatment groups ), பரஸ்பர உதவி மூலம் உளவியல் சார்ந்த தேவைகளைப் பூர்த்தி (reciprocal goals - mutual aid groups) செய்யவும் குழுப்பணி பயன்படுகிறது.
பார்க்க: social group work - சமூகக் குழுப்பணி - ஒத்த ஆர்வமும் பொதுவான பிரச்சனைகளுமுள்ள சிறிய எண்ணிக்கையிலான நபர்களை, தொடர்ந்து சந்திக்க வைத்து, அவர்களுக்குகந்த குறிக்கோள்களை அடையச் செயல்பட உதவும் சமூகப்பணியின் அணுகுமுறை மற்றும் செயல்பாட்டு முறையை சமூகக் குழுப்பணி எனலாம். இது உளப்பிரச்சனைகளுக்கான சிகிச்சையைப் பிரதானமாக வைத்துச் செயல்படும் உளப்பிணி சிகிச்சைக் குழுக்களிலிருந்து மாறுபட்டது. சமூகப்பணிக் குழுக்கள், தகவல் பரிமாறிக் கொள்ளவும், சமூகத் தொடர்பாடல் மற்றும் வாழ்வியல் சார்ந்த திறன்களை வளர்த்துக் கொள்ளவும், வாழ்வியல் கண்ணோட்டங்களை மாற்றிக்கொள்ளவும், சமூக விரோத நடத்தைகளிலிருந்து மனதை மாற்றிக்கொண்டு பயனுள்ள வாழ்வு வாழ உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. சமூகக் குழுப்பணியின் உதவு முறைகளில் வரையறுக்கப்பட்ட சிகிச்சை / அளவான சிகிச்சை முறைகளும் உண்டு. கல்வி, தனிப் போதனை, விளையாட்டு, கலை, கைத்தொழில், பொழுது போக்கு, அரசியல், மதம், பாலியல், சமூக நெறிகள், வாழ்வியல் குறிக்கோள்கள் போன்ற தலைப்புகளில் விவாதங்கள் என்று குழுப்பணி உதவுமுறைகள் பரந்துபட்டது. இருத்தலியல் கோட்பாடு (existential - தனிமனிதனுக்கு முக்கியத்துவம் தரும், தனிமனிதனே அறிவின் அடிப்படை அலகு என்ற இருத்தலியல் தத்துவம் - தனிமனிதனைப் பற்றி குறிப்புணர்த்துதல்), கற்றல் கோட்பாடு (learning), உளப்பகுப்பாய்வுக் கோட்பாடு (psychoanalyitic), சமூகப் பரிமாற்றக் கோட்பாடு (Social exchange) போன்ற பல கோட்பாடுகளிலிருந்து அறிவுத்தளத்தைப் பெற்று, அதை சமூக அமைப்பியல் கண்ணோட்டதில் ஆய்ந்து, குழுவின் செயல்பாடுகளுக்கு சமூகக் குழுப்பணி விளக்கமளிக்கின்றது. இந்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் பெற்ற கண்ணோட்டம், குழுவின் இயக்கவியலைப் புரிந்துகொள்ளவும், குழுவைக் கடந்த உறவுமுறைகளைப் புரிந்துகொள்ளவும் சமூகப்பணியாளர்களுக்கு பெருமளவு உதவுகிறது. இந்த அடிப்படையில் குழுப்பணியை 1. சமூக நோக்கை முன்மாதிரியாய்க் கொண்ட முறை, 2. பரஸ்பர செயல்களை / பயன்களை முன்மாதிரியாய்க் கொண்ட முறை 3. குணப்படுத்தலை முன்மாதிரியாய்க் கொண்ட முறை என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.
பார்க்க: Remedial Group Model, Reciprocal Group Model, Group Goal Model, Socail Goal Model

English

See social group work.