heart attack

மாரடைப்பு

தமிழ் விளக்கம்

இதயத்திற்கு இரத்தம் கொண்டு செல்லும் நாளங்களில் அடைப்போ / தடையோ ஏற்பட, அதனால் ஏற்படும் இரத்தவோட்டத் தடையால் இதயத் தசைகள் நலிவுற்று இதயம் சிறுதுசிறிதாகத் தன் செயல்திறனை இழந்து, இரத்தத்தை வெளித்தள்ள முடியாமல் இதயம் செயலிழப்பது. கடுமையான மார்பு வலி, மூச்சிறைத்தல், வியர்த்தல், திடீர் காய்ச்சல், வாந்தி, குமட்டல் போன்றவை இதன் அறிகுறிகள்
நமது இதயம் சக்தி வாய்ந்த இறைப்பியாகச் (Pump) செயற்பட்டு உடல் முழுவதற்கும் குருதியை வழங்குகின்றது. இதயத் தசைக்கு குருதி வழங்கும், இதய இரத்தத் தமனிகள் (முடியுறு நாடிகள் coronary arteries) ஆக்ஸிஜன் ஏற்றப்பட்ட குருதியைத் தேவையான அளவு வழங்குவதன் மூலம் இதயத்தை ஆரோக்கியமாகப் பேணுகின்றன. இதய இரத்தத் தமனிகளில் (முடியுரு நாடிகள்) இரத்தக் கட்டி அடைத்தல், கொலஸ்ரோல் படிவு, முடியுரு நாடியின் சுவரில் ஏற்படும் சுருக்கம் போன்றவற்றால், முடியுரு நாடியில் இரத்த ஒட்டம் தடைப்படுவதால், முடியுரு நாடியால் குருதி வழங்கப்படும் இதயத்தின் தசைப்பகுதியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படுகின்றது. இதனால் அப்பகுதி நிரந்தரமான பாதிப்புக்கு உள்ளாகின்றது. இந்நிலை கொண்டுள்ளவர் கடினமாய் உழைக்கும் வேளையில் அவர்களுக்கு நெஞ்சுவலி ஏற்படும். ஓய்வு எடுக்கும் போதும், நைட்ரேட்டு மாத்திரைகள் சாப்பிடும் போதும் இதய குருதியோட்டம் சீரடைந்து இந்த வலி குறையும். இதை மார்பு நெரிப்பு என்கிறோம். இந்த நிலைக்கான மருத்துவ உதவியை உரிய காலத்தில் தராவிட்டால் வீக்கத்தழும்பு வெடித்து குருதிக்குழாய்களுள் குருதி உறைந்து குழலியக்குருதியுறைமை (Thrombosis) ஏற்பட்டு நிரந்தரமான அடைப்பு உருவாகும். இந்நிலையில் குறிப்பிட்ட இதயத்தசைப் பகுதி குருதி பெறுவதை முற்றிலும் இழக்கின்றது. இதனால் இதயத் தசைகள் இறந்து விடுகின்றன. இந்த நேரத்தில் ஓய்வு எடுத்தாலும் வலி குறையாது. இத்தகைய சூழலே இதயத்தசை இறப்பு ஆகும். இந்நிலையே மரடைப்பு ஆகும்.

English

Partial failure of the pumping action of the heart. Generally, an event in which the blood vessels that feed the heart become blocked and the heart muscle does not receive enough blood. Symptoms usually include severe chest pains, sweating, hot flashes, and nausea; moreover, permanent damage to the heart may occur. See also myocardial infarction.