HIV

மனித நோயெதிர்த்திறனழித் தீநுண்மம், மனித நோய்த்தடுப்புக்குறை வைரஸ், மனிதனின் நோய் எதிர்ப்பாற்றலைக் குறைக்கும் திறன் கொண்ட வைரஸ் (தீ நுண்மம்)

தமிழ் விளக்கம்

எச்.ஐ.வி அல்லது மனித நோயெதிர்த்திறனழித் தீநுண்மம் (HIV - Human immunodeficiency virus) எனப்படுவது எய்ட்சு நோயை உருவாக்கும் ரெட்ரோவைரசு (retrovirus) வகை தீ நுண்மம் (Virous) ஆகும். இந்த வைரசு தாக்கும்போது, மனிதரில் இயற்கையாக இருக்கும் நோய் எதிர்ப்புத் திறனில் (Immunity) குறைபாடு ஏற்பட்டு, அந்தக் குறைபாட்டின் காரணமாக நோய் எதிர்ப்பாற்றல் முறைமை சரிவரத் தொழிற்படாமல், ஏனைய தொற்றுநோய்களுக்கு ஆட்படக்கூடிய சந்தர்ப்பம் அதிகரிக்கிறது. இலகுவாக வேறு உயிர்கொல்லி நோய்களின் தாக்கத்துக்கு உட்பட நேர்வதனால் இறப்பு ஏற்படலாம்.
இந்த வைரசானது குருதி, விந்துநீர், யோனித் திரவம், தாய்ப்பால் போன்ற உடல் திரவங்களின் மூலமாக ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு கடத்தப்படும். பொதுவாக நான்கு வழிகளில் இந்தத் தொற்று ஏற்படும். அவையாவன: குழந்தை பிறப்பின்போது தாயிலிருந்து சேய்க்கு, பாதுகாப்பற்ற உடலுறவு, மருத்துவ சிகிச்சை அல்லது ஆய்வுகளில் பயன்படுத்தப்படும் தூய்மையற்ற ஊசிகள் மற்றும் தாய்ப்பால். மருத்துவ சிகிச்சையில் குருதி ஏற்றும்போது அதனூடாக இந்த வைரசு பரவுவதைத் தடுக்க, சேமிக்கப்படும் குருதியை முதலிலேயே ஆய்வுக்குட்படுத்தி, தொற்றற்றது என்பது உறுதி செய்யப்பட்ட பிறகே குருதியேற்றுவார்கள்.
ஒருவரது உடலு‌க்கு‌ள் இந்தக் ‌‌கிரு‌மி நுழை‌ந்து‌வி‌ட்டா‌ல் அதனை மு‌ற்‌றிலுமாக அ‌ழி‌க்க முடியாது. ஆதலால் எ‌‌ய்‌ட்‌‌‌‌சு எ‌ன்பது குணப்படுத்த முடியாத நோயாகக் கருதப்படுகிறது. உலக சுகாதார அமைப்பானது இந்த வைரசால் ஏற்படும் எய்ட்சு நோயை ஒரு உலகம்பரவு நோயாக அறிவித்துள்ளது. ஆனாலும் இதுபற்றிய சரியான விழிப்புணர்வின்மையால், இது தொடர்ந்து கட்டுப்படுத்தமுடியாத நோயாகவே இருந்து வருகிறது. இந்நோய் கண்டு பிடிக்கப்பட்ட 1981 ஆம் ஆண்டிலிருந்து, 2006 ஆம் ஆண்டிற்குள், உலகில் கிட்டத்தட்ட 25 மில்லியன் மக்கள் இந்த வைரசுத் தொற்றினால் இறந்துள்ளனர். இந்த வைரசானது உலக மக்கள் தொகையின் 0.6% சதவீதத்தினருக்கு தொற்றை ஏற்படுத்தியிருப்பதாக அறியப்படுகிறது. 2005 ஆம் ஆண்டில் மட்டும் 2.4 –3.3 மில்லியன் மக்கள் இந்நோயால் இறந்துள்ளதாகவும், அதில் 570,000 க்கு மேற்பட்டோர் குழந்தைகள் எனவும் அறியப்படுகிறது. இதில் மூன்றில் ஒருபகுதி வறுமை நிலை காரணமாக ஆப்பிரிக்காவில் sub-sahara, பகுதியில் நிகழ்ந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. தற்போதைய நிலமையின்படி ஆப்பிரிக்காவில் 90 மில்லியன் மக்கள் இந்த வைரசுத் தாக்குதலுக்கு ஆட்பட்டிருப்பதாகவும், இதனால் கிட்டத்தட்ட 18 மில்லியன் அநாதைக் குழந்தைகள் உருவாகும் சாத்தியம் இருப்பதாகவும் ஆய்வுகள் சொல்கின்றன.

English

See human immunodeficiency virus (HIV).