infant mortality rate

சிசு மரண விகிதம்

தமிழ் விளக்கம்

பொதுவாக ஒரு குழந்தை பிறந்து, ஒரு வயதை எட்டுவதற்கு முன்னர் இறந்தால், அதைக் குழந்தை இறப்பு அல்லது சிசு மரணம் (Infant mortality) என்றும், ஐந்து வயதை எட்டுவதற்கு முன்னர் இறந்தால், அதை ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தை இறப்பு (Under-five mortality) என்றும், உலக சுகாதார அமைப்பு (WHO) வரையறுக்கின்றது. குழந்தை மரணம், குழந்தைகளின் உடல்நலத்தை மட்டுமல்ல ஒரு நாட்டின் மொத்த அபிவிருத்தியைச் சுட்டும் ஒரு அளவீடாகக் கருதப்படுகிறது. 2008 ஆம் ஆண்டில், உலகளவில் பிறக்கும் குழந்தைகளில் 8.8 மில்லியன் குழந்தைகள் (ஐந்து வயதுக்குட்பட்ட), இலகுவில் தடுக்கப்படக் கூடிய, அல்லது குணப்படுத்தக் கூடிய நோய்களால் வளர்ந்து வரும் நாடுகளில் இறந்து போனதாகவும், அதற்கு முக்கிய காரணம் ஊட்டச்சத்துக் குறையே என்று யுனிசெஃப் நிறுவனம் (UNICEF) கருத்து தெரிவித்துள்ளது.
உலகளவில் 5 வயதுக்குள் குழந்தை இறப்பு விகிதம், சிசு மரண விகிதம் - மரணத்தைத் தழுவும் குழந்தைகளில் 32 சதவீதம் தெற்காசியாவைச் சேர்ந்தவர்கள் என இன்டர் ஏஜென்சி குரூப் ஆப் சைல்டு மார்டலிட்டி எஸ்டிமேசன் (inter Agency Group of Child Mortality Estimate) என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. இறக்கும் குழந்தைகளில் 75 சதவீதம் பேர் இந்தியா, நைஜீரியா, காங்கோ, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளில் உள்ளனர். இதில் இந்தியக் குழந்தைகள் மட்டும் 21 சதவீதம் பேர். இது ஆப்பிரிக்காவில் 51 சதவீதமாகவும், ஆசியாவில் 42 சதவீதமாகவும் உள்ளது. 1990ல் உலக முழுவதும் 90 ஆக இருந்த குழந்தை இறப்பு விகிதம் தற்போது 65 ஆக குறைந்துள்ளது. ஆனால், ஆப்ரிக்காவின் சஹாராப் பாலைவனத்தை ஒட்டிய நாடுகளில் இது இன்னும் குறைந்தபாடில்லை. அங்கு பிறக்கும் 7 குழந்தைகளில் ஒன்று, 5 வயதுக்கு முன்னதாகவே இறந்துவிடுகிறது. அதாவது பிறக்கும் 1000 குழந்தைகளில் 144 பேரின் உயிர் காக்கப்படுவதில்லை. மேற்கு மற்றும் மத்திய ஆப்ரிக்க நாடுகளின் நிலைமை இதைவிட மோசம். அங்கு ஆறில் 1 குழந்தை இறந்து விடுகிறது. அங்கு குழந்தை இறப்பு விகிதம் 169 ஆக உள்ளது என்று (UNICEF) சொல்கிறது.

English

The demographic measure of the number of neonatal deaths that occur in proportion to the population as a whole or to the population of potential mothers (fecundity rate). The infant mortality rate is often used as a key factor in assessing the health and health care programs of a nation or community.