institutional-versus-residual model

முன்னேற்பாட்டு சமூகப்பணி X பின்தங்கியவர்களுக்கான / தேங்கிவிட்டவர்களுக்கான சமூகப்பணி

தமிழ் விளக்கம்

மனிதர்கள் வாழவும் செயல்படவும் தேவையான உதவிகளையும், சேவைகளையும் தந்துதவே சமூகப்பணி உருவாகி, தொழில் முறை வடிவம் பெற்றது. சமூகப்பணியின் தொழில் செயல்பாடு இரண்டு முக்கிய அணுகுமுறைகளை அடிப்படையாகக் கொண்டது. அவற்றைச் சுருக்கமாக பிரச்சைனையைத் தீர்க்கும் அணுகுமுறையென்றும், பிரச்சனைகளைத் தடுக்கும் அணுகுமுறையென்றும் சொல்லலாம். பிரச்சனைகளைத் தீர்த்தல் என்பது பிரச்சனைகளைத் தீர்க்கமுடியாமல் பின் தங்கியவர்களுக்கு, பிரச்சனையினால் ஸ்தம்பித்து செயலற்றுப் போனவர்களுக்கு உதவி, அவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப செய்யப்படும் உதவி. இது Residual Social Work எனப்படுகிறது. இதற்கு மாறாக மனித வாழ்க்கையில் எந்தெந்தக் காலகட்டங்களில், எந்தெந்த சூழ்நிலைகளில் பிரச்சனைகளால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை முன்கனித்து, அந்தப் பிரச்சனைகளைத் தடுக்க, முன்னேற்பாடுகளைச் செய்யும் சமூக மற்றும் அரசு கருமங்கள் Institutional Social Work எனப்படுகிறது.
ஒவ்வொரு மனிதருக்கும் அவருடைய பிரச்சனைகளைத் தீர்க்குமளவு அவரைச் சுற்றியுள்ள சமூகமே (உ.ம் குடும்பம், உறவினர்கள், நண்பர்கள், சக பணியாளர்கள், சந்தை, மதம்) சில ஏற்பாடுகளைச் செய்கின்றதென்றும், அதை சரியாகப் பயன்படுத்தத் தெரியாமையால்தான் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியாமல் பின் தங்குகிறார்கள். சமூகமும், சமூகச் சூழ்நிலையும் எல்லோருக்கும் சமமான வாய்ப்புக்களை வழங்குவதாகவும், ஒருசிலரால் அந்த வாய்ப்புகளைப் பலகாரணகளால் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியாமல் பின் தங்கும் போது (like residue), வழக்கமான வழிமுறைகள் அல்லது இயங்கமைப்புகள் உதவமுடியாதபோது, அதன் உதவியைப் பெற இயலாத போது, பிரச்சனைகள் ஸ்தூலமாக வெளிப்பட்டு பிறரின் பார்வைக்கு / கவனத்திற்கு வருகிறது. அவர்களுக்கு உதவி செய்து, சமூக வாய்ப்புகளைப் பயன்படுத்தி, அவர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புமளவு அவர்களின் திறன் வளர்க்கப்பட வேண்டுமென்ற கருத்தே residual social work (பின் தங்கி விட்டவர்களுக்கான சேவை / ஸ்தம்பித்து நின்று விட்டவர்களுக்கான சமூகப்பணி) எனப்படுகிறது. பிரச்சனைகள் உருவானபின் வினையாற்றுவதால் இந்த முறையை மறுவினை ஆற்றல் (reactive) என்கிறோம்.
இதற்கு மாறாக மனிதர்களுக்கு எந்தக்காரணத்தால் பிரச்சனைகள் ஏற்பட்டாலும், அப்பிரச்சனைகளைத் தீர்க்கவும் அல்லது அவர்கள் வளரவும், சமூகம் சமமான வாய்ப்புக்கள் வழங்காத நிலையிருப்பதாலும், சமூகம் வழங்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்த இயலாத நிலையில் (உ.ம். குழந்தைகள், ஊனமுற்றோர், கர்ப்பிணிகள், முதியோர், நோயுற்றவர்) மனிதர்கள் இருப்பதாலும், அவர்களுக்கு உதவ வேண்டியது ஒரு சமூகத்தின் தார்மீகக் கடமையாதலால், பிரச்சனைகளை முன்னறிந்து அவர்களுக்கு உதவ அனைத்து முன்னேற்பாடுகளும் செய்ய வேண்டியது சமூகம் மற்றும் அரசின் கடமையாகும் என்ற கருத்தை மையப்படுத்தியதே Institutional Social Work எனப்படுகிறது.
சமூகப் பணியின் செயல்பாடுகள் அனைத்தும் இந்த இரண்டு மையக் கருத்தாக்கங்களிலிருந்தே உருவாகின்றன.

English

See residual-versus-institutional model.