invisible hand
மறைமுக கரம்
தமிழ் விளக்கம்
பொருளியலின் தந்தை என அழைக்கப்படும் ஆடம் ஸ்மித், தடையிலா வணிகத்தை வலியுறுத்தியவர். அவரின் தடையிலா அங்காடி (Free Market) மேற்போக்கில் ஒழுங்கற்றதாகத் தோன்றினாலும், உள்ளபடிக்கு அது தன்னையே முறைப்படுத்திக் கொள்ளும் ஒரு செயல்முறையைக் கொண்டிருக்கிறது. அதன்படி, அந்த அங்காடி, சமுதாயம் மிகுதியாக விரும்பக் கூடிய, சமுதாயத்திற்கு மிகவும் தேவைப்படக்கூடிய பொருள்களை, சமுதாயம் விரும்புகிற வகையிலும், சமுதாயத்திற்கு தேவைப்படுகிற அளவுக்கும் தானாகவே உற்பத்தி செய்ய முனைகிறது. எடுத்துக்காட்டாக, மக்கள் விரும்பும் ஏதேனும் பொருள் பற்றாக்குறையாக இருக்கிறது எனக் கொள்வோம். அப்போது அதன் விலை ஏறுவது இயற்கை. விலை ஏற, ஏற அப்பொருளின் உற்பத்தியாளருக்கு அதிக ஆதாயம் கிடைக்கிறது. இவ்வாறு அதிக ஆதாயம் கிடைப்பதைப் பார்த்து மற்ற உற்பத்தியாளர்களும் அதே பொருளை உற்பத்தி செய்ய ஆவல் கொள்கிறார்கள். இதனால் உற்பத்தி பெருகி, முதலில் நிலவிய பற்றாக்குறை நீங்கிவிடும். மேலும், பொருளின் உற்பத்தி பெருகி, அதை உற்பத்தி செய்யும் பல்வேறு உற்பத்தியாளர்களிடையே ஏற்படும் போட்டி காரணமாக, அந்தப் பொருளின் விலை அதன் இயல்பான விலைக்கு (Natural Price). அதாவது, அதன் உற்பத்திச் செலவுக்கு (Production Cost) குறைந்து விடும். பற்றாக்குறையை நீக்கிச் சமுதாயத்திற்கு உதவி புரிய யாரும் வேண்டுமென்றே முயற்சி மேற்கொள்ளவில்லை. எனினும் அந்தப் பற்றாக்குறைச் சிக்கல் தானாகவே தீர்ந்து விடும். ஸ்மித்தின் கூற்றுப்படி, ஒவ்வொரு மனிதனும் தனது சொந்த ஆதாயத்தையே கருத்தில் கொள்கிறான். எனினும், ஒரு மறைமுகமான கரத்தின் தூண்டுதல் காரணமாக, அவன் உணராமலே, ஒரு குறிக்கோள் எட்டுவதற்கு உதவுகிறான்.அவன் தன் சொந்த நலனுக்குப் பாடுபடுவதன் மூலம், தானே உதவி புரிய எண்ணியிருந்தால் எந்த அளவுக்கு உதவி புரிந்திருக்க கூடுமோ அந்த அளவைவிட மிகக் கூடுதலான அளவில் சமுதாயத்திற்கு அவன் உதவி செய்கிறான்.
English
The premise of some economic theorists, beginning with Adam Smith in the 18th century, that unrestricted trade and the free economic market, in which people can pursue their self-interests, will ultimately (invisibly) lead to the general welfare.