Jungian theory

யுங்கியன் கோட்பாடு

தமிழ் விளக்கம்

கார்ல் யுங், பிராய்டின் சமகாலத்தவர் மட்டுமல்ல, அவருடன் இணைந்து பணியாற்றியவரும் கூட. ஆழ்மனதைப் பற்றி பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்தவர். பிராய்டின் Id, Ego,Super Ego என்ற மனக் கட்டமைப்பை விரித்தும், சிலவற்றை மறுத்தும் விளக்கினார். அவருடைய கருத்தாங்களில் நனவிலி கூட்டு ஆழ்மனம் (collective unconscious), மூலப்படிவம் அல்லது ஆதிமனம் (archetype), மனப்பான்மை (complexes), அகமுகன் (introvert), புறமுகன் (extrovert), அர்த்தமுள்ள தற்செயல் ஒற்றுமைகள் (synchronicity), கனவுகளுக்கான விளக்கம் (dream interpretation) போன்றவை முக்கியமானவை.
நினைவற்ற கூட்டு ஆழ்மனத்தை, பொதுவானது / சுயமானது என்று இருவகையாகப் பிரித்தார். பொது ஆழ்மனம் (collective Unconsciousness or objective psyche) என்பது, பரிணாம வளர்ச்சியின் அனுபவங்களும், மூதாதையரின் அனுபவங்களும் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் படிந்துள்ள பதிவுகள் என்றார். கார்ல் யுங், டார்வினின் பரிணாமக் கொள்கையையும், மெண்டலின் பாரம்பரியக் கொள்கையும் உளவியலில் இணைத்தார். இந்த பொது மனதில் மனிதனின் உள்ளார்ந்த உணர்வுகளும், உள் உந்துத‌தல்களும் ஆக்க சக்திகளும், ஆன்மீக கலாசார, பாரம்பரிய உணர்வுகளும் உள்ளதென்றார். இரண்டாவது சுயமான ஆழ்மனது (personal unconsciousness) நனவிலி மனப்பான்மைகளால் (complexes) கட்டமைக்கப்பட்டது என்று விவரித்தார். இதில் தான் பிராய்ட் சொன்ன அடக்கப்பட்ட உணர்வுகளின் தொகுப்பு அடங்கியுள்ளதென்றும், இதில் வளர்பருவ நிகழ்வுகளின் காயங்களும், தழும்புகளும், பதிவுகளும் உள்ளன என்று சொன்னார். இந்த மனப்பான்மையில் சில நினைவு மனத்தில் இருக்கலாம், சில ஆழ்மனத்தில் அறியாமல் புதைந்தும் இருக்கலாம். சில மனப்பான்மைகள் மிதமாகவும், சில தீவிரமாகவும் வெளிப்படும் தன்மை கொண்டது. இந்த வெளிப்பாடு வளர்பருவச் சூழ்நிலை, சுற்றுபுறச் சூழ்நிலை, உணர்ச்சிகள், நிகழ்வுகள் போன்றவற்றைச் சார்ந்திருந்தாலும், அதன் அடிப்படை மனிதர்கள் உள்வாங்கும் மாதிரிகளின் (archetype - ஆதிமனம் அல்லது மூலப்படிவம்) தன்மை பொறுத்து அமையும் என்றார். இந்தத் தொல்மனம் என்பது பரிணாம வளர்ச்சி மற்றும் மனிதகுல வளர்ச்சியின் விளைவாக நம்முடன் உள்பிறந்து, மனப்பான்மை என்ற பண்புகளை வளர்க்கிறது. கலாச்சார, தேசிய, பூகோள வேறுபாடுகளைக் கடந்து உள்மனம் மனித‌ உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. தாய்மை, ஆளுமை போன்ற பொதுப் பண்புகளே ஆதிமனம் என்று யுங் விவரித்தார். குறியீடுகள் அல்லது படிமங்கள் (symbols) என்பதை மனதில் ஆழபுதைத்துள்ள கருத்துக்களின் மறைமுக வெளிப்பாடு என்று கனவுகளுக்கு விளக்கமளித்தார். வாழ்க்கையின் சில எதிர்பாராமல் ஏற்படும் மகிழ்ச்சி மற்றும் சோக நிகழ்வுகளை, சிங்க்ரானிசிடி (synchronity) எனப்படும் ‘அர்த்தமுள்ள தற்செயல் ஒற்றுமைகள்’ என்ற கருத்தாக்கத்தின் மூலம் விளக்கினார். மனதிற்கு நான்கு முக்கிய பண்புகள் உண்டென்று சொன்ன யுங், அதை ஐம்புலன்கள் முலமாகச் சுற்றுப்புறத்தை அறிதல் (Sensing), சிந்தித்தல் (Thinking), உணர்தல் (Feeling, உள்ளுணர்வு மூலமாக, ஆழ்மன ரீதியாக விஷயங்களைப் பகுத்துப்பார்த்தல் (Intuiting) என்றும் விளக்கினார்.

English

Concepts about the development of human personality and psychopathology formulated by Swiss psychiatrist Carl Gustav Jung (1875-1961). These concepts emphasize the conscious and unconscious influences on behavior. Important concepts include the collective unconscious (collection of human thoughts and experiences that have developed through many generations, called an archetype), dream analysis, introversion and extroversion, and anima and animus. See also introvert and extrovert.