kinship
உறவுமுறை, பந்துத்துவம், தாயதி, தாயத்தனம், சொந்தம், பண்புத் தொடர்பு
தமிழ் விளக்கம்
தனி மனிதர்களைச் சமூகக் குழுக்களாக ஒழுங்குபடுத்துவதற்கான அடிப்படையான அம்சம் உறவுமுறை ஆகும். ஆரம்பத்தில் இது உயிரியல் மரபுவழியால் தீர்மானிக்கப்படுவதாகக் கருதப்பட்டது. ஒரு மனிதன் பிறக்கும்போதே தாய், தந்தை, சகோதரர்கள் மற்றும் பல தாய்வழி, தந்தைவழி உறவினர்கள் எனப் பல உறவினர்கள் இருப்பார்கள். அவர்கள் வளர்ந்து மணம் செய்யும்போது அவர்களின் துணைவர்கள் வழியிலும் புதிய உறவுகள் சேர்கின்றன. பிள்ளைகள் பிறக்கும்போது உறவினர் வட்டம் விரிந்து கொண்டு செல்கின்றது. இருப்பினும் ஒரு மனிதனுக்கு அமையும் உறவுகள் எல்லாமே ஒரே விதமானவை அல்ல. உறவுகளுக்கிடையேயான முக்கியத்துவம் ஒரே தன்மையில் அமைவதில்லை. சில உறவுகள் மிகவும் நெருக்கமாக இருக்கின்ற அதே வேளை வேறு சில மேம்போக்கானவையாக இருக்கின்றன. ஒருவருடைய தாய், தந்தை, பாட்டன், பாட்டி, பூட்டன், பூட்டி, பிள்ளைகள், பேரப் பிள்ளைகள், சகோதரர் ஆகியோர் உயிரியல் முறையில் தொடர்பானவர்கள். இவர்களுடைய உறவுகள் இரத்த உறவு எனப்படுகின்றது. ஏற்கெனவே இரத்த உறவினரல்லாத ஒருவரை மணம் செய்யும் போது அவருடைய கணவன் அல்லது மனைவியுடன் ஏற்படும் புதிய உறவு முறை மண உறவு ஆகும். அது மட்டுமன்றி மனைவி அல்லது கணவனுடைய உறவினர்களும் இவருக்கு உறவினராகின்றார்கள். இதுவும் மண உறவின் வகைப்பட்டதே. தவிர ஒருவரைத் தத்து எடுத்துக்கொள்வதன் மூலமும் உறவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இத்தகைய உறவுகள் புனைவியல் உறவு எனப்படும்.
English
A group of people bound by the same blood-line (genetic inheritance). Use of the term usually implies other characteristics shared by the family, such as similar behaviors, values, and talents.