macroeconomics
பருவினப் பொருளியல், விரிநிலைப் பொருளியல், பேரினப் பொருளியல்
தமிழ் விளக்கம்
பொருளியல் (economics) என்பது மக்கள் பயன்படுத்தும் அல்லது உருவாக்கும் பொருட்கள் மற்றும் சேவைகள் பற்றிய உற்பத்தி, பகிர்வு, நுகர்வு என்பன பற்றி ஆராயும் சமூக அறிவியல் ஆகும். உற்பத்தி, பகிர்வு பற்றிய கருத்துருவாக்கங்கள் வரலாற்றில் நீண்ட காலத்திற்கு முன்பாக உருவாக்கப்பட்டபோதிலும், 1776 ல் வெளிவந்த ஆடம் ஸ்மித் (Adam Smith) என்பாரின் வெல்த் ஆஃப் நேஷன்ஸ் (The Wealth of Nations - நாடுகளின் செல்வம்) எனும் நூலில், ஸ்மித் அனைத்துப் பொருளியல் கருத்தாக்கங்களையும் ஒருங்கிணைத்து பொருளியல் என முறைபடுத்தப்பட்ட அறிவியல் துறையாக புத்தாக்கம் பெறச் செய்தார். பருப்பொருளியல் / பருவினப் பொருளியல் / விரிநிலைப் பொருளியல் (Macroeconomics) என்பது, பொருளியலின் இரு பெரும் பிரிவுகளில் ஒன்றாகும். மற்றொன்று நுண்பொருளியல் (microeconomics) ஆகும். பருப்பொருளியல் நாடுசார் அல்லது மண்டலம்சார் பொருளாதாரச் செயற்பாடு, கட்டமைப்பு, நடத்தை ஆகியவற்றுடன் தொடர்புள்ளது. ஒரு நாட்டினுடைய பொருளாதாரத்தின் கட்டமைப்பு மற்றும் அதனுடைய செயல்திறன் ஆகியவற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்த கூடிய எந்த ஒரு விஷயமும் பருவினப் பொருளியல் சார்ந்ததாகும். பருப்பொருளியல், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), வேலையின்மை வீதம், விலைச் சுட்டெண் போன்றவற்றை ஆய்வு செய்வதன் மூலம், முழுப் பொருளாதாரமும் எவ்வாறு செயற்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முயல்கிறது. தேசிய வருமானம், நுகர்வு, வேலையின்மை, பணவீக்கம், சேமிப்பு, முதலீடு, பன்னாட்டு வணிகம், பன்னாட்டு நிதியம் போன்றவற்றுக்கு இடையிலான தொடர்புகளை விளக்கும் மாதிரிகளை பருப்பொருளியலாளர்கள் உருவாக்குகின்றனர். ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, வேலையின்மை விகிதம ஆகியவற்றைக் குறைக்க ஆரசாங்கம் தீட்டும் செயல்திட்டம், நாட்டின் நிதிக் கொள்கை (Fiscal policy), ஒரு நாட்டின் பண அமைப்பைக் கட்டுபடுத்த மத்திய வங்கி தீட்டும் பணவியல் கொள்கை (Monetary policy), வணிகச் சுழற்சிகள் (Business cycles), பணவீக்கம் (inflation) மற்றும் பணவாட்டம் (deflation) இவை அனைத்துமே பருவினப் பொருளியல் கீழ் வருவனவாகும்.
English
The study of production, distribution, and consumption of a nation, society, or the world, as influenced by long-term trends, ecological changes, international relations, and large-scale technological advances. See also microeconomics.