management

மேலாண்மை, பரிபாலனம், முகாமைத்துவம், நிர்வாகம் (நிர்வாகத்தின் மூலச் சொல் நிர்மன் என்ற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து பெறப்பட்டது (நிர்மாணம், நிர்வாகம்)

தமிழ் விளக்கம்

முகாமைத்துவம் (தமிழ் வழக்கு - மேலாண்மை, management) எனும் சொல், குறிப்பிட்ட நோக்கங்களை அடைய முயலும் நிறுவனம் (வணிகம், அரசுத் துறைகள், சேவை), தன் பணியாளர்களைக் கொண்டு, தன்னிடமிருக்கும் அல்லது தன்னால் பெறமுடிந்த வளங்களைப் பயன்தரும் வண்ணம் ஒருங்கிணைத்துச் செயல்படும் முறையாகும்.
நிறுவனத்தில் இத்தகைய நடவடிக்கையினை மேற்கொள்ளுபவர் முகாமையாளர் (அ) மேலாளர் (manager) எனப்படுவார். இங்கு வளங்கள் எனப்படுவது நிறுவனம் சார்ந்த மனிதவளம், நிதி வளம், பொருண்மை வளம் (physical), புலமைசார் வளம் (intellectual), கட்புலனாகா வளம் (intangible) ஆகிய வளங்களைக் குறிக்கும். மேரி பார்க்கர் ஃபாலட் (Mary Parker Follet) (1868–1933) என்பவரே, மேலாண்மைக்கான முதலாவது வரைவிலக்கணத்தை முன்வைத்தவராவார். இவரின் கருத்தின்படி மேலாண்மை என்பது 'ஊழியர்களைக் கொண்டு கருமங்கள் ஆற்றுவிப்பது தொடர்பான செயற்பாடாகும்' ('the art of getting things done through people'). இவரைத் தொடர்ந்து பலரும் மேலாண்மைக்குப் பலவித வரைவிலக்கணங்களை அளித்துள்ளனர். இறுதியாக 'மேலாளர் என்ன செய்கின்றாரோ அதுவே மேலாண்மை' எனப் பொருள்படுத்தியுள்ளனர். ஒரு செயலை அல்லது பணியை பிறநபர்கள் மூலமாகச் செய்து முடிக்கப்பெறுவது மேலாண்மை (Management) என மேரி பாலெட் (Mary Follett: 1868–1933) குறிப்பிடுகிறார். மேலாளர்கள் (Managers) ஒரு வேலையை அல்லது பணியைத் தாமே செய்வதில்லை. மாறாக அவர்கள் அந்தப் பணியை யார் சிறப்பாகச் செய்ய முடியும் என்பதை முடிவு செய்து அவர்களிடம் அப்பணியை ஒப்படைக்கிறார். மேரி பாலெட்டின் இந்த வரைவிலக்கணம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் திருக்குறளில், தெரிந்துவினையாடல் என்ற அதிகாரத்தில் 'இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்'. என்று வள்ளுவர் குறிப்பிட்டிருப்பது இங்கு நினைவு கூறத்தக்கது.
பார்க்க: administration in social work - சமூகப்பணியில் நிர்வாகம், சமூக சேவை நிறுவனங்களை நிர்வகித்தல் - சமூகப்பணியில் நிர்வாகம் என்பது பொதுவான நிர்வாக நடைமுறைகளைப் பின்பற்றியே செய்யப்பட்டாலும், சமூகப்பணி கையாளும் பிரச்சனைகளும், அதற்காக வகுக்கப்பட்ட நெறிமுறைகளும் அதைப் பிற நிர்வாக முறைகளிலிருந்து வேறுபடுத்திக்காட்டுவன. சமூகப்பணியில் நிர்வாகம் என்பது சமூக நலத்திற்கான குறிக்கோள்களை (Social Policy) சமூக சேவைகளாக மாற்றும் முயற்சிதான். இதற்காக ஒரு சமூக சேவை நிறுவனத்திற்காகக் குறிக்கோள்களை வடிவமைப்பது, அதை அடையத் தேவையான நிதி, மனிதவளம், கட்டமைப்பு ஆதாரங்களை ஒருங்கிணைப்பது, நிறுவனச் செயல்பாடுகளைக் கண்காணிப்பது, மதிப்பீடு செய்வது, தேவையான மாற்றங்களைச் செய்வதன் மூலம் நிர்வாகத் திறனை மேம்படுத்துவது போன்ற கடமைகள் சமூகப்பணி நிர்வாகத்திற்கு உண்டு. சமூகப்பணி நிர்வாகம் சமூகப்பணி மதிப்பீடுகளையும், நெறிமுறைகளையும் சமூகப்பணியாளர்கள் பின்பற்ற ஏதுவான சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுத்து மக்களின் பிரச்சனைகளை உடனடியாக எதிர்கொள்ள வழிவகுக்கும் முறையாகும்.

English

See administration in social work.