management information systems (MISs)
நிர்வாகத் தகவல் அமைப்பு, நிர்வாகத்திற்கான தகவல் முறைமை
தமிழ் விளக்கம்
'MIS' என்பது, தரவுகள் (பெயர்கள், புள்ளிவிவரங்கள், கருத்துக்கள், படங்கள்) சேகரித்தல், அதை வகைப்படுத்தித் தொகுத்துவைத்தல், அதன் தன்மையை மதிப்பீடு செய்தல், நிறுவன நோக்கங்கள் நிறைவேறத் தேவையான முடிவுகள் எடுப்பதற்கு உதவியாகத் தகவல்களைத் தந்துதவுதல் போன்ற நிர்வாகச் செயல்பாடுகளைக் குறிக்கும்.. சிறிய நிறுவனமெனில் கையேடுகளிலும் பேரேடுகளிலும் விவரங்களை எழுதி வைத்துத் தகவலைக் கையாள முடியும். ஆனால் பெரிய நிறுவனங்களில் அத்தனை தகவல்களையும் ஏடுகளில் எழுதிவைத்துக் கையாள்வது இயலாத செயல். தேவையான விவரங்களை, தேவையான நேரத்தில் தேடி எடுப்பது கடினம். அப்படியே எடுத்தாலும் அது துல்லியமான, புதுப்பித்த தகவலாய் (Updated Information) இருக்குமா என்பது ஐயமே. ஆகவே, மேலாண்மைப் பொறுப்பிலுள்ளோர் சரியான முடிவுகளை மேற்கொள்ள (to take right decisions), சரியான தகவல்கள் (right information), சரியான நேரத்தில் (at right time), சரியான நபருக்கு (to right person), சரியான வடிவமைப்பில் (in right format) சென்று சேர வேண்டும். இதுவே மேலாண்மைத் தகவல் முறைமையின் அடிப்படை நோக்கமாகும். பெரிய நிறுவனங்களில் தகவல்களைக் கையாளக் கணிப்பொறிகளைப் பயன்படுத்துகின்றனர். மேலாண்மைத் தகவல் அமைப்புக்கெனத் தனிச்சிறப்பான கணிப்பொறி மென்பொருள்கள் பயன்பாட்டில் உள்ளன. மேலாண்மை அமைப்பின் ஒவ்வொரு நிலைக்கும் / அடுக்குக்கும் (levels of management) பயன்படக்கூடிய வகையில் அவை உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சில: 1 அலுவலகத் தானியக்கமாக்க முறைமை (Office Automation System), 2 பரிமாற்றச் செயலாக்க முறைமை (Transaction Processing System), 3 தகவல் அறிவிப்பு முறைமை (Information Reporting System), 4 முடிவெடுக்க உதவி முறைமை (Decision Support System), 5 நிர்வாகத் தகவல் முறைமை (Executive Information System). தொழில்நுட்பமும் நிர்வாகமும் சந்திக்கும் புள்ளியில் 'MIS 'இருப்பதாகக்' கூறப்படுகிறது. பணியாளர்கள் அவர்களின் பணியை இன்னும் சிறப்பாகவும் விரைவாகவும் திறமையாகவும், அறிவு நேர்த்தியுடனும் செய்வதற்குத் தேவையான தகவல்களை வழங்குவதற்கு எம்.ஐ.எசு (MIS) தொழில்நுட்பத்தையும் நிர்வாகத்தையும் ஒன்றிணைக்கிறது. தகவல்களே நிறுவனங்களின் செயல்பாட்டிற்கு மிக முக்கியமானதாகையால், அதைக் கையாளுவதில் நிறுவனங்கள் அக்கறை காட்டுகின்றன. சமூகப்பணி நிர்வாகத்திலும் மேலாண்மைத் தகவல் முறை, பணியாளர்களின் செயல்பாட்டைக் கண்காணிக்கவும், எந்த மாதிரியான சேவைகள் எந்த மாதிரியான வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன என்பதை அறிந்துகொண்டு அதில் தேவையான மாற்றங்களைச் செய்ய உதவுகிறது.
English
An administrative method often used in social agencies to acquire, process, analyze, and disseminate data that are useful for carrying out the goals of the organization efficiently. MISs may be used to track staff activity and the services that are provided to clients.