marriage

கல்யாணம், திருமணம், விவாகம், மணவினை

தமிழ் விளக்கம்

திருமணம் ஒரு சமூக, சட்ட, உறவுமுறை சார்ந்த அமைப்பாகும். மணம் என்பது ஓர் ஆணும், ஒரு பெண்ணும் இணைந்து இல்லறம் மேற்கொள்ள நடத்தபெறும் ஒரு வாழ்க்கை ஒப்பந்தம். குடும்பம், பாலுறவு, இனப்பெருக்கம், பொருளாதாரம் போன்ற பல காரணங்களுக்காக திருமணம் செய்யப்படுகிறது. மனிதனால் மனித சமுதாயத்தின் நலன் கருதி உருவாக்கப்பட்ட ஒழுக்க முறை. திருமணம் என்பது மனித இனத்தைப் பொறுத்தவரை ஒரு உலகளாவிய பொதுமையாக இருந்த போதிலும், வெவ்வேறு பண்பாட்டுக் குழுக்களிடையே திருமண நடைமுறைகளில் வெவ்வேறு விதமான விதிகளும், நெறிமுறைகளும் காணப்பட்டாலும், அது சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண், பெண் உறவு நிலையைக் குறிக்கிறது. அதோடு திருமணம் என்பது ஒரு புதிய சந்ததி தோன்றுவதற்குரிய ஒருவிதப் பிணைப்பு ஆகும். ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு, அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப்பொறுப்பில் நடத்துவதற்குப் பலர் அறியச் செய்துகொள்ளும் செயலே திருமணம் எனப்படும்.
மணம் என்ற சொல்லுக்குக் 'கூடுதல்' என்பது பொருள். இதன் வேர்ச்சொல் மண் என்பதாகும். இச்சொல் பல பொருளை உடையதாக இருந்தது. 'மண்ணுதல்' என்ற சொல்லின் பொருள் கழுவுதல், நெருங்குதல், கலத்தல், கூடுதல், அழகுபெறுதல் எனப்பல. திருமணம் என்பது இருவர் கூடிக் கலந்து நிறைவுபெரும் செயலைக் குறிப்பதாக அமைகின்றது. சிறப்பான, மேன்மையான ஒன்றைக் குறிப்பிட, 'திரு' என்ற அடை கொடுத்து அழைப்பது தமிழர் மரபாகையால், இல்லற வாழ்வின் அடிப்படையாக அமையும் மணம் 'திருமணம்' என்று அழைக்கப்படுவதாகப் பொருள் சொல்வார். மணத்தைக் குறிக்கப் பல்வேறு சொற்கள் தமிழரால் பயன்படுத்தப்பட்டன. அவை முறையே கடி, மணம், மன்றல், வதுவை, வதுவைமணம், வரைவு என்பன. இவை மணத்தின் தன்மை, நடைபெறும் இடம் போன்ற காரணங்களின் அடிப்படையில் உருவானது. சில சொற்கள் பிற மொழியாளர் தொடர்பு, பிற சமயத்தவர் தொடர்பு காரணமாக வழக்கில் இடம் பெற்றது. சான்றாகக் ' கல்யாணம்' என்ற சொல் மணத்தைக் குறிக்கும் வகையில் நாலடியாரிலும், ஆசாரக்கோவையிலும் பயின்று வந்துள்ளமையைக் காணலாம்.

English

A legally and socially sanctioned union between two people resulting in mutual obligations and rights. Traditionally this union has been between one woman and one man. However, some societies, subcultural groups, religious organizations, and legal jurisdictions have sanctioned unions between members of the same sex, between several people, or between one person and a spiritual entity.