men's liberation movement
ஆண்கள் விடுதலை இயக்கம்
தமிழ் விளக்கம்
ஆண்கள் விடுதலை இயக்கம் இருவேறுவிதமான தத்துவ நிலைப்பாடுகளைக் கொண்டது. அது சிலநேரங்களில் சித்தரிக்கப்படுவது மாதிரி, பெண்விடுதலைக் கருத்துக்களால் ஆண்களின் சம்பிரதாயமான ஆதிக்கம் பறிபோவதைத் தடுக்க ஆரம்பிக்கப்பட்ட இயக்கமோ அல்லது தத்துவ நிலைப்பாடோ அல்ல. பெண்விடுதலை இயக்கக்கூறுகளிலிருந்தே ஆண்கள் விடுதலை இயக்கம் உருவானது. அது ஆண்கள் தங்கள் மீது சுமத்தப்பட்ட சிலுவைகளிலிருந்து விடுபட முனைந்தது. ஆண்கள் விடுதலைக்கான கருத்துருக்கள் பலவகைகளில் இருந்து பெறப்பட்டது. 1. ஆணாதிக்க சமூகம் ஆண்களின் மீது சுமத்தியுள்ள கட்டுக்களிலிருந்து விடுதலை பெறுவது. ஆணாதிக்க சமுதாயம் ஆண்களின் மீது சுமத்தியுள்ள பொறுப்புக்களால் அவர்கள் வேலைப்பழு மிக்கவர்களாகவும், கொல்லவும் கொலை செய்யப்படவும் பயிற்சியளிக்கப்படுவதாகவும், முரட்டுத்தனம் மிக்கவர்களாகவும், எளிதில் குற்றச்சாட்டிற்கு உள்ளாக்கப்படுபவர்களாகவும், எளிதில் அவமானத்திற்குள்ளாகுபவர்களாகவும், இதனால் அன்னியப்பட்ட வறட்சியான வாழ்க்கை வாழ நிர்பந்திக்கப்பாடுபவர்களாகவும், இது இளைஞர்களின் வாழ்க்கையை மோசமாக்கி அவர்கள் துணைக்கலாச்சாரங்களையும் மாற்றுக்கலாச்சாரங்களையும் தேடிச் செல்பவர்களாக ஆக்கிவிட்டது என்ற நிலைப்பாடு. 2. இனம் என்னும் கருத்தாக்கம் ஆண்களை பிரதிநிதிப்படுத்தும் வார்ப்புரு மனநிலையிலிருந்து விடுதலை பெறுவது. எடுத்துக்காட்டாக கறுப்பின ஆண்கள் தங்கள் பாலுணர்வுகளை முரட்டுத்தனமாக வெளிப்படுத்துவதால், அவர்களை விலங்குகளுக்கு இணையாகக் கருதுவது ஒருபுறம் என்றால், ஆசிய நாட்டு ஆண்கள் இச்சையற்றவர்களாகவும், காயடிக்கப்பட்டவர்களாகவும் சித்தரிக்கப்படுகின்றனர். இந்தப் பாலியல் சித்தரிப்புகளிலிருந்து ஆண்கள் விடுதலை பெறவேண்டும். 3. தன்பாலின நாட்டமுடைய ஆண்கள் ஆண்மைத்தன்மை என்பது பெண்களை வென்றெடுக்கும் செயலல்ல என்ற நிலையைப் பிரதிபலிப்பதால் ஆண்மைத்தன்மை என்பது ஒரு சமூகமனப்பான்மைக் கட்டமைப்பே தவிர அது இயல்பானதல்ல என்ற நிலைப்பாடு. இந்த வகையான நிலைப்பாடுகள் தரும் மனோபாவங்களிலிருந்து ஆண்கள் விடுதலை பெற வேண்டும் என்று ஆண்கள் விடுதலை இயக்கம் முனைந்தது.
English
The organized efforts of disparate people and groups to eliminate sex role stereotyping and gender bias against men and to widen the range of acceptable behaviors identified with masculinity and male roles. See also women's liberation movement.