moral development
அறநெறி வளர்ச்சி
தமிழ் விளக்கம்
சரியானது, தவறானது என்ற தரத்தினடிப்படையில், மதிப்பீடுகள், உணர்வுகள், எண்ணங்களை வளர்த்துக்கொள்வதே அறநெறி வளர்ச்சி எனப்படுகின்றது. ஜீன் பியாஜிஜோவின் அறிவாற்றல் வளர்ச்சிக் கோட்பாட்டிற்கு இணையாகச் சொல்லப்பட்டதுதான் லாரன்ஸ் கோல்பெர்க் அவர்களின் அறநெறி / நல்லொழுக்க வளர்ச்சிக் கோட்பாடு. மனிதனுடைய அறநெறி / தார்மீக / நல்லொழுக்க வளர்ச்சி மூன்று வகைகளாக, ஆறு அடையாளம் காணத்தக்க நிலைகளில் நடைபெறுவதாக கோல்பெர்க் எடுத்துரைத்தார். 1. அறநெறியை அதன் மேன்மையின் பொருட்டு பின்பற்றாமல் புலனெறி சார்ந்து (தண்டனை தவிர்க்க, பாராட்டு பெற, தன் மகிழ்ச்கிக்காக) பின்பற்றல். வழக்கமாவதற்கு முந்தைய அறநெறி/ நல்லொழுக்கப்ப பிரக்ஞைக்கு முந்தைய நல்லொழுக்கம் (Pre-Conventional). இந்த நிலையில் குழந்தைகள் சில நல்லொழுக்கங்களைப் பின்பற்றினாலும், அதன் முக்கியத்துவம் கருதியோ அதை உணர்ந்தோ செய்வதில்லை. மாறாக சில செயல்களின் விளைவுகளுக்கு அஞ்சியோ அது தரும் மகிழ்ச்சிக்காகவோ செய்யப்படுகிறது. நிலை 1. பணிவதால் கிடைக்கும் பாராட்டிற்கும் அதை மீறுவதால் கிடைக்கும் தண்டனைக்கு பயந்தே குழந்தைகள் நல்லொழுக்கத்துடன் நடந்துகொள்ளும் நிலை (Obedience and punishment orientation) 2. ஒரு செயலைச் செய்வதால் தனக்கு என்ன கிடைக்கும் என்று வெகுளித்தனமான தன்னல நோக்குடன் செய்யப்படும் காரியங்கள் (Self-interest orientation) 2. வழக்கமான / இயல்பான / உறுதிப்படுத்தப்பட்ட நல்லொழுக்கம் இதை செய்யலாம் இதைச் செய்யலாகாது என்ற சமூக வரையறைகளை விமர்சனமின்றி ஏற்றுக்கொண்டு பின்பற்றப்படும் நல்லொழுக்கம். சமூக விதிகளைப் பின்பற்றுவதால் பாராட்டோ, பின்பற்றாவிட்டால் தண்டனையோ கிடைக்காது என்று தெரிந்திருந்தும் ஒழுக்கமாக நடந்துகொள்ளும் நிலை (Conventional). 3. மற்றவர்களின் அங்கீகாரத்தின் பொருட்டு, மற்றவர்களிடம் இங்கிதமாக நடந்து கொள்ள வேண்டி பின்பற்றப்படும் ஒழுக்க நிலை. நல்ல பையனாக, நல்ல பெண்ணாக நடந்துகொள்ள விரும்புதல் (Interpersonal accord and conformity - he good boy/girl attitude) 4. சமூக விதிமுறைகளுக்கும், அதிகாரத்திற்கும் கீழ்ப்படிந்து நல்லொழுக்கமாக நடத்தல் (Authority and social-order maintaining orientation). 3. வழக்கத்தைக் கடந்த / பிறருக்காக அன்றி தானே ஏற்றுக்கொண்டு பின்பற்றும் நல்லொழுக்கம் / சுதர்மம். மனித உரிமைகள், சமத்துவ நோக்கு, சுதந்திரம், சமூக நீதி போன்ற தார்மீகக் கோட்பாடுகளை அடிப்படையாக வைத்து, மற்றவர்களின் அங்கீகாரத்திற்கு எங்கிக் கொண்டிராமல், தன் மனச்சாட்சிக்கு ஒப்ப நடத்தல் (Post-Conventional). 5. நல்லொழுக்கம் என்பது சமூக ஒப்பந்தத்தின்படியும், சட்ட முறைகளின் படியும் நடக்கும் செயலென்று பின்பற்றுதல் (Social contract orientation). 6. நல்லொழுக்கம் என்பது மனச்சாட்சிப்படி நடத்தல் (Universal ethical principles - Principled conscience) என்று மூன்று படிகளைக்கொண்ட ஆறு நிலைகளில் அறநெறி வளர்ச்சி ஏற்படுவதாக கோல்பெர்க் எடுத்துரைக்கின்றார்.
English
Acquiring the values, feelings, and thoughts that lead to behaviors that are consistent with standards of right or wrong. Many theorists have proposed models about how this is accomplished, including Gilligan, Kohlberg, Piaget, Mischel, and Erikson. See also Kohlberg moral development theory and values clarification.