Native Americans
பூர்வீக இந்தியர்கள்
தமிழ் விளக்கம்
இந்தியாவைக் கண்டுபிடிப்பதற்கு கடற்பயணம் புறப்பட்ட கொலம்பஸ், 1492- இல் அமெரிக்காவைச் சென்றடைந்தார். தான், இந்தியாவிற்குத்தான் வந்திருக்கிறோம் என்று கொலம்பஸ் உறுதியாக நம்பினார். அங்கிருந்த மக்களையெல்லாம் இந்தியர்களென்றே கருதினார். இந்தியர்கள் என்று கொலம்பஸால் அழைக்கப்பட்ட அந்த மக்கள் பிற்பாடு, செவ்விந்தியர்கள் (Red Indians) என்று அறியப்பட்டார்கள். செவ்விந்தியர்களுக்குப் பிரதான இந்தியாவுடன் எந்தத் தொடர்பும் இல்லை. அவர்களது உடல் நிறத்திலும் இந்தியர்களை விட வேறுபட்டவர்கள். செவ்விந்தியர்களின் நிறம் சிவப்பல்ல என்றாலும் செவ்விந்தியர்களின் தலை இளம் பழுப்பு நிறத்தில் இருந்ததால், சில சாகசப் பயணிகள் அவர்களை 'ரெட் ஸ்கின்ஸ்' (சிவப்புத் தோலுடையவர்கள்) என்று அழைக்க, இந்தியன் என்ற பெயரும், சிவப்பும் சேர்ந்து கடைசியில் 'செவ்விந்தியர்கள்' என்ற பெயர் ஏற்பட்டது. இப்போது, மேற்குப் பகுதியில் வசிக்கும் ஆதிவாசிகள் பொதுவாக செவ்விந்தியர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். செவ்விந்தியர்கள் மிகவும் வீரமானவர்கள். அதுமட்டுமல்ல, அவர்களுக்கென்று தனி கலாசாரமும், பண்பாடும் இருந்தன. அதாவது, அவர்கள் பெயரளவில்தான் ஆதிவாசிகள். மற்றபடி நாகரிகமானவர்கள்தான். அவர்கள் அலைந்து திரிகிற நாடோடி வாழ்க்கையை மிகவும் விரும்பினார்கள். விவசாயம்தான் முக்கியத் தொழில். அமெரிக்காவின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று, முக்கியமான இயற்கை வளங்களையெல்லாம் கண்டுபிடித்தது செவ்விந்தியர்கள்தான். இதற்காக, உலகமே அவர்களுக்கு மிகப் பெரிய அளவில் நன்றிக் கடன்பட்டிருக்கிறது. செவ்விந்தியர்கள்தான் தங்கம், செம்பு, வெள்ளி முதலான வளங்களைக் கண்டுபிடித்தார்கள். அவற்றை நோக்கி வெள்ளைக்காரர்களின் கவனத்தைத் திருப்பியதும் செவ்விந்தியர்களே. அவர்கள்தான் முதன்முதலாக ரப்பர் சேகரித்தார்கள். புகையிலை விவசாயம் செய்தார்கள். உணவு விஷயத்தில் வெள்ளைக்காரர்களுக்கு அவர்கள் கொடுத்த மிகப் பெரிய கொடை சோளமும், உருளைக்கிழங்கும். அதையெல்லாம் எப்படி விவசாயம் செய்வதென்று அவர்கள், குடியேறிய வெள்ளைக்காரர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். மிளகு, அன்னாசிப் பழம், நிலக்கடலை ஆகியவற்றை ஐரோப்பியர்களுக்கு செவ்விந்தியர்களே அறிமுகப்படுத்தினார்கள். இந்த உணவுப் பொருட்களைப் பற்றி 1492-க்கு முன்புவரை ஐரோப்பியர்களுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. கலைகளின் மீது மிகவும் ஈடுபாடு கொண்டவர்கள் செவ்விந்தியர்கள். அருமையான கைவினைப் பொருட்கள் செய்யவும் கற்றிருந்தார்கள். உயர்ந்த நாகரிகம் உடைய மக்களாக இருந்தார்கள். செவ்விந்தியர்களுக்கிடையே நிறைய உட்பிரிவுகளும், நிறைய மொழிகளும் இருக்கின்றன. உணவு, உடை, தொழில் ஆகியவற்றில் உட்பிரிவுகளிடையே பெரிய வித்தியாசங்கள் உண்டு. அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான நதிகளுக்கும், நகரங்களுக்கும் இப்போதுள்ள பெயர்களில் பலவும் செவ்விந்தியர்கள் வைத்தவை தான். ஏறத்தாழ 400 வருடங்களுக்கு முன்பு, கண்ணுக்கெட்டிய தூரம்வரை அமெரிக்காவில் மேய்ச்சல் காடுகளே இருந்தன. அதில், கருமேகங்கள் இறங்கி வந்ததைப்போல காட்டெருமைகளின் பெரிய மந்தை நடந்து செல்லும். செவ்விந்தியர்களின் வாழ்க்கையின் ஆதாரம் இந்தக் காட்டெருமைகள்தான். உணவு, உடை, ஆயுதங்கள், சமையலறைக் கருவிகள், சிறிய தோணிகள் இப்படி எல்லாவற்றிற்கும் அவர்கள் காட்டெருமைகளைத்தான் சார்ந்திருந்தார்கள். வாழ்க்கைக்காக மட்டுமே அவர்கள் காட்டெருமைகளை வேட்டையாடினார்கள். புல் மேடுகளில் காணப்படும் ஓநாய்களிடமிருந்து காட்டெருமைக் கன்றுகளைக் காப்பாற்றினார்கள். அமெரிக்காவில் புதிதாகக் குடியேறிய வெள்ளைக்காரர்கள், தங்களுடைய உதவியும் இரக்கமும் தேவையில்லாமல் வாழ்கின்ற செவ்விந்தியர்கள் மீது கோபம் கொண்டார்கள். அவர்களை அடக்குவதற்கு அவர்கள் சார்ந்திருந்த காட்டெருமைகளைக் கொல்வதுதான் வழி என்று முடிவெடுத்து, காட்டெருமைகளை அழிக்கும் கொடூரமான வழியைக் கையாண்டார்கள். காட்டெருமைகளை அழிப்பதன் மூலமே செவ்விந்தியர்களை அடிமைப்படுத்த முடியும் என்று வெள்ளையர்கள் நினைத்தார்கள். எனவே, வெள்ளைக்காரர்கள் பரந்த அளவில் காட்டெருமைகளைச் சுட்டுக் கொல்லத் தொடங்கினார்கள். வெள்ளைக்காரர்களின் முயற்சி வெற்றியடைந்த போது, சுயமரியாதை மிக்க செவ்விந்தியர்கள் குளிராலும், பசியாலும் செத்துவிழத் தொடங்கினார்கள்.
English
Also called American Indians, the ethnic-racial-cultural groups of American citizens whose ancestors lived in the Western Hemisphere before its exploration and settlement by Europeans. The "Native-American" or "American Indian" designation has been applied to 350 to 400 (some say up to 600) distinct ethnic groups that use over 250 languages. There are no cultural norms that may be correctly applied to all those groups.