Parkinson's disease

பார்க்கின்சன் நோய்

தமிழ் விளக்கம்

பார்க்கின்சன் நோய் என்பது ஒரு உடல் நடுக்க நோய். இந்நோய் ஐம்பது வயதிலிருந்து எழுபத்தைந்து வயதிற்குள் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம். ஆண்களே இந்நோயினால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். மரபுக் காரணிகளும், சுற்றுப்புறச் சூழ்நிலையில் ஏற்படும் மாற்றங்களும் இந்நோய் வருவதற்கான வாய்ப்புகளைத் துரிதபடுத்தும். மரபு நிலையில் மூளையில் அதிக அளவு புரதம் சேர்வதற்கு என்.ஏ.சி.பி மற்றும் எம்.ஏ.பி.டி மரபணுக்கள் காரணமென்று கண்டறிந்துள்ளனர். மூளையில் சினுசிளின் எனப்படும் புரதம் அதிகம் சேர்வதால், அது நியூரான் செல்களைப் பாதித்து, நினைவுத் திறனுக்குக் காரணமாக விளங்கும் டோபமைன் எனும் செல்கள் உற்பத்தியைக் குறைக்கின்றது. இதனால் நினைவுத் திறன் மங்கிப் போகிறது. இதன் காரணமாகத் தலை நிற்காமல் ஆடுவது, கை, கால்கள் கட்டுப்பாடின்றி துடித்துக் கொண்டே இருப்பது, செயல்பாடுகளில் மந்த நிலை போன்றவை ஏற்படும். இவை அனைத்தும் பார்கின்சன் நோயின் அடையாளமாகும்.
எவ்விதக் காரணமும் இல்லாமலே டோபாமைன் குறையலாம். சூழல் ரீதியாக மேங்கனீஸ், இரும்பு தாதுப் பொருட்களுடன் தொடர்புடைய ஆலையில் தொடர்ந்து பணிபுரிவோருக்கு இப்பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம். பார்க்கின்சன் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூன்று முக்கிய அறிகுறிகள் தென்படும். 1. நடுக்கம் - கட்டுப்படுத்த முடியாத நடுக்கம். பொதுவாக இந்நடுக்கம், கரம் அல்லது புயங்களில் ஏற்படும். கரம் ஓய்வில் இருக்கும்போதே பொதுவாக நடுக்கம் உண்டாகும். மனவழுத்தம், மனக்கவலை அல்லது களைப்பு இருக்கும்போது அதிகமாகப் புலப்படும். 2. மந்தமான இயக்கம்: இது இந்நோயின் இன்னொரு இயல்பாகும். ஓர் அசைவைத் திட்டமிடலில் இருந்து தொடங்கி செயல்படுத்துவது வரை கடினமாக உணருவார்கள். 3. விறைப்பு: தசைகள் அதிகமாகத் தொடர்ந்து சுருங்குவதால் விறைப்பும் கை அசைவில் சிரமமும் ஏற்படும். இவர்களால் சரியாக நிற்கமுடியாது. கைகால் உதறும். நடக்கும் போது சின்னச் சின்ன அடியெடுத்து நடப்பார்கள். முகமும் பார்வையும் வெறுமையாகத் தோன்றும். கையெழுத்து கிறுக்கலாகவும் பொடிப் பொடியாகிவிடும். சட்டையில் பட்டன் போட முடியாது. சிலருக்குப் படிப்படியாக மோசமாகும். சிலருக்கு வருடக்கணக்கில் ஒரே மாதிரியாகக் கூட தொடரும்.

English

A disease characterized by progressive motor disability and manifested by tremor or shaking, muscle stiffness, poor coordination, and sometimes dementia. The initial onset occurs most frequently among people between ages 50 and 65. Some patients become severely incapacitated but live long lives, and others may die within a few years as a result of complications.