poor law
வறியவர் சட்டம்
தமிழ் விளக்கம்
ஏழ்மையின் தாக்கத்தைக் குறைக்கவும், ஏழைகளைக் (அவர்களில் பிச்சையெடுப்பவர்களை) கட்டுப்படுத்தவும், ஏழைகளைச் சமூகப் பொருளாதார ரீதியில் பராமரிக்கவும் இங்கிலாந்து மற்றும் அமெரிக்க அரசுகள் செய்த முயற்சிகளுக்கெல்லாம் கடந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு பொதுச் சொல்லாட்சி. 20 ஆம் நூற்றாண்டிற்கு முந்தைய காலகட்டத்தில் ஏழைகளை மிகக் கண்டிப்புடன் கையாண்ட பல நடைமுறைகளைச் இச்சட்டம் குறிக்கிறது. இந்தச் சட்டத்தின் மூலம் வறியவர் இல்லங்களில் வைத்து ஏழைகளைப் பராமரித்தல், தகுதியற்ற ஏழைகளை (திடகாத்திரத்துடனிருந்த ஆனால் உழைக்கச் சோம்பியவர்கள்) வேலைக்கூடங்களில் (மாடுழைப்புக் கூடங்கள் workhouses) அடைத்தல் போன்ற நடைமுறைகள் மக்களை நிவாரணமோ உதவியோ பெறுவதற்குத் தயக்கம் கொள்ளச் செய்தது. இந்தக் காலகட்டத்தில், அடுத்தடுத்து பின்வரும் சட்டங்கள் அமலுக்கு வந்தது. 1. வறியவர்களுக்கான எலிசபெத் அரசியின் சட்டங்களின்படி வேலை செய்ய இயலாத ஏழைகள் (பார்வையற்றவர்கள், முதியவர்கள், ஊனமுற்றவர்கள், நோயாளிகள்) வறியவர் (poor houses) இல்லங்களுக்கு அனுப்பப்பட்டார்கள். திடகாத்திரமான ஏழைகள் பணியகங்களுக்கு (work houses) அனுப்பட்டார்கள். வேலைசெய்ய முடிந்த ஆனால் சோம்பித்திரிந்த ஏழைகள் சிறையிலடைக்கப்பட்டார்கள். அனாதை மற்றும் ஏழைக்குழந்தைகள் பணிபயில்வோராக (apprentice) பிணைப்படுத்தப்பட்டார்கள் 2. எட்டாம் ஹென்றியின் (1536) வறியவர் சட்டத்தின்படி, உள்ளூர் அரசுகளிடம் பிச்சைக்காரர்களைக் கையாளுவதற்கு வரிவசூலிக்கும் உரிமையும், அவர்களைத் தண்டிக்கும் உரிமையும் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி ஊனமுற்ற பிச்சைக்காரர்களைத் தவிர்த்து, மற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து பிச்சை எடுத்தலைத் தவிர்க்க வேண்டும். அதையும் மீறி பிச்சை எடுப்பவர்களுக்கு அடையாளச் சூடு இடவும், சிறையிலிடவும், அவர்களிடமிருந்து குழந்தைகளைப் பிரிக்கவும், சட்டத்தை மீறித் தொடர்ந்து பிச்சை எடுப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கவும் இச்சட்டத்தின் மூலம் வழி செய்யப்பட்டது. 3. 1782 ஆம் ஆண்டு போடப்பட்ட கில்பர்ட் சட்டத்தின்படி உதவி தேவைப்படுபவர்கள், முதியோர், இயலாதவர்கள், குழந்தைகள், செயல் விருப்பற்ற வீண் காலங்கழிப்பவர்கள் என்று வகைப்படுத்தப்பட்டார்கள். ஒப்பந்த அடிப்படையில் அனாதை இல்லங்களில் சேர்க்கப்பட்ட செயல் விருப்பமற்றவர்களைக் கண்காணிப்பாளர்கள் மூலம் வேளையில் அமர்த்த அறிவுறுத்தப்பட்டனர்.
English
A generic term technically referring to any government statute pertaining to the economic and social care of and control of poor people or measures to reduce the extent of poverty. However, the term is primarily used to refer to a group of repressive statutes in Colonial America and in England before the 20th century. These laws established the almshouse, indoor relief, and concepts about the "unworthy poor" and were generally conceived to discourage people from seeking relief. See also Elizabethan Poor Laws, Henrician Poor Law, Statute of Labourers, Gilbert Act, and Poor Law of 1834.