quantitative research
அளவுசார்ந்த / அளவையுடன் தொடர்புடைய / அளந்து மதிப்பிடத்தக்க / கணக்கிடத்தக்க ஆய்வு, அளத்தலை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு, (quantitative methods: அளவை பற்றிய விளக்க முறைகள்)
தமிழ் விளக்கம்
அறிவைத் தேடுதலே ஆய்வாகின்றது. அறிதொறும் அறியாமை புலப்படுவதால் ஆய்வு என்பது தொடர்ச்சியான செயல் முறையாகின்றது. புதிய அறிவைத் திரட்டுவதற்குரிய ஒழுங்கமைந்த செயல் முறையே ஆய்வில் முன்னெடுக்கப்படுகின்றது. ஆய்வென்ற கல்விச் செயல்முறை அறிந்ததில் இருந்து அறியாததை நோக்கிச் செல்லும் இயக்கவிசையாகின்றது. ஆய்வின் வழியாகக் கண்டுபிடிப்புக்ககள் நிகழ்கின்றன. புத்தாக்கங்கள் முன்வைக்கப்படுகின்றன. அளவையியல் முறைமை ஆய்வுகளைத் தொடர்ந்து, விஞ்ஞான முறைமை, ஆய்வியல் வரலாற்றிலே பெரு வளர்ச்சியடைந்தது. விஞ்ஞான முறையின் முக்கியமான பண்பு, அனுபவநிலை பரீட்சித்தலுக்கு (Emprically Testable) வழியமைத்தலாகும். இந்நிலையில் பரிசோதனைகளே மெய்மையைக் கண்டறிவதற்குரிய திறவுகோல் என விஞ்ஞான ஆய்வுகளில் கருதப்பட்டது. விஞ்ஞான முறைமையைச் செம்மைப் படுத்துவதற்கு அளவையியல் முறைமை தொடர்ந்து உதவிவருகின்றது. சமூக விஞ்ஞான ஆய்வுகளில் பரந்தளவில் பயன்படுத்தப்படும் ஆய்வு முறையியல்களுள், புள்ளி விபரவியல் ஆய்வு முக்கியமானதாகும். எண் பெறுமானங்களுக்குள் கொண்டு வந்து மதிப்பிடலை இது முன்னெடுக்கின்றது. எண்பெறுமானங்களுக்கு கொண்டு வருதலே இதன் பலமும் பலவீனமும் ஆகும். கல்விப் போக்குகள், சமூதாய இயல்புகளின் போக்குகள், இயற்கையின் போக்குகள் முதலியவற்றை ஆராய்வதற்கும் உய்த்துணவர்தற்கும் இது பயன்படுகின்றது. புள்ளிவிபரவியல் வழியாகத் தொகுக்கப்பட்டும், பல்வேறு சுட்டெண்கள் அபிவிருத்திக் கோலங்களை விளக்குவதற்கு பெருமளவில் பயன்படுத்தப்பட்டும் வருகின்றன. புள்ளி விபரங்களை விளக்குவதோடு மட்டும் இந்த ஆய்வு நின்று விடக்கூடாது. புள்ளி விபரத் தரவுகளோடு தொடர்புடைய பண்புசார் காரணிகளை விளக்கும் பொழுதுதான் இது முழுவீச்சுக் கொண்ட ஆய்வாகக் கருதப்படும். புள்ளி விபரங்களின் பிரதிநிதித்துவம் செய்யும் பண்பிலும் கவனம் செலுத்துதல் வேண்டும். புள்ளிவிபரங்களை அட்டவணையம் (Tabulation) செய்தல், வகுப்பு இடைவெளிகளை அமைத்தல், வரிவடிவப் படங்களாக்குதல், மீடிறன்களைக் காணுதல், மத்திய போக்குகளை அறிதல், நியம விலகலைத் கணித்தல், இணைப்புக் குணகத்தைக் கணித்தல், நியம வழுக்களைக் கண்டறிதல், தரப்படுத்துதல், பொருண்மை காணுதல், அனுமானித்தல் முதலாம் புள்ளிவிபர ஆய்வுகளை மேற்கொள்வதற்கு கணிப்பொறிகள் உதவுகின்றன. புள்ளிவிபரவியல் ஆய்வுகள் எண் பெறுமானங்களைக் கொண்டு ஆக்கப்படுவதால் பண்பு நிலையான கருத்துக்களை எண் பெறுமானங்களுக்குள் கொண்டுவரும் பொழுது மிகுந்த எச்சரிக்கையும் முன்திட்டமிடலும் அவசியமாகின்றன.
English
Systematic investigations that include descriptive or inferential statistical analysis. Examples are experiments, survey research, and investigations that make use of numerical comparisons.