reproductive technology
இனப்பெருக்கத் தொழில்நுட்பம்
தமிழ் விளக்கம்
இனப்பெருக்கத் தொழில்நுட்பம் பொதுவாக மலட்டுத்தன்மை சிகிச்சை (Infertility Treatment) என்றே அறியப்படுகிறது. ஆண்களிலோ, பெண்களிலோ அல்லது இருவரிலும் கூட்டாகவோ, குழந்தை ஒன்றைப் பெற்றுக்கொள்ள முடியாத மலட்டுத்தன்மை காணப்படும்போது, அந்நிலையை அகற்றி, குழந்தைப் பேற்றைக் கொடுப்பதற்காக வழங்கப்படும் சிகிச்சை அல்லது அதற்காக மேற்கொள்ளப்படும் தொழில் நுட்பமாகும். இந்தச் சிகிச்சையானது முழுமையாகவோ, அல்லது பகுதியாகவோ செயற்கையான முறைகளைக் கொண்டிருக்கும். இந்தச் சிகிச்சைகள் கடினமானவையாகத் தோன்றினாலும், மலட்டுத்தன்மைக்கான காரணிகள் பற்றியும், சிகிச்சைகள் பற்றியும் தெளிவான விழிப்புணர்வுடன் சிகிச்சைக்குட்படும்போது, மன அழுத்தம் குறைவாகி, சிகிச்சை வெற்றியளித்து, குழந்தை பெற்றுக்கொள்ளல் இலகுவாகும். உண்மையில் மலட்டுத்தன்மையற்ற பெற்றோராக இருப்பினும், எய்ட்சு தொற்றால் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் பட்சம், குழந்தைக்கும் அந்த நோய் தொற்றாமல் தவிர்க்கவும், இனப்பெருக்கத் தொழில்நுட்பம் பயன்படுவதுண்டு. இதில் பலவகையான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவையாவன முட்டை உருவாக்கத்தை அதிகரித்தல் (Ovulation Induction), செயற்கை விந்தூட்டல் (Artificial Insemination - AI), நுட்பத்துணை இனப்பெருக்கத் தொழில்நுட்பம் (Assisted Reproductive Technology - ART), வெளிச் சோதனை முறை கருக்கட்டல் (In Vitro Fertilization - IVF), பாலோப்பியன் குழாய் உள்ளான புணரி / பாலணு இடமாற்றம் (Gamete Intrafallopian Transfer - GIFT), குழியமுதலுரு உள்ளான விந்து உட்செலுத்தல் (Intracytoplasmic Sperm Injection - ICSI). இவைதவிர, இம் முறைகளிலிருந்து சில மாற்றங்களுடன் செய்யப்படக் கூடிய வேறு சில முறைகளும் உள்ளன. கடந்த பல ஆண்டுகளாக இவ்வகையான சிகிச்சையால் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. 2009 இல் செய்யப்பட்ட ஒரு ஆய்வின்படி, அமெரிக்காவில் 2009 ற்கு முன்னரான 10 ஆண்டுகளில், நுட்பத்துணை இனப்பெருக்கத் தொழில்நுட்ப சிகிச்சை செய்யப்படுவது இரண்டு மடங்கை விட மேலாக அதிகரித்திருக்கின்றது. இனப்பெருக்கத் தொழில்நுட்பம் முன்னேற்றமடைந்து, வெற்றியளிக்கும் வீதமும் அதிகரிக்கின்றது. குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத, ஆனால் குழந்தை வேண்டுமென விரும்பும் பெற்றோருக்கு இனப்பெருக்கத் தொழில்நுட்பச் சிகிச்சைகள் மிகவும் உதவியாக இருக்கின்றன.
English
Medically supervised systems of artificially facilitating a fetus's conception and development through to birth. These technologies include artificial insemination, surrogacy, in vitro fertilization, and embryo freezing.