research

ஆராய்ச்சி, ஆய்வு

தமிழ் விளக்கம்

உண்மைகளை அல்லது கோட்பாடுகளை அறிய விரும்பிச் செய்யப்படும் முறையான நடைமுறைகளே ஆய்வெனப்படுகிறது. அறிவைத் தேடுதலே ஆய்வாகின்றது. அறிதொறும் அறியாமை புலப்படுவதால் ஆய்வு என்பது தொடர்ச்சியான செயல் முறையாகின்றது. புதிய அறிவைத் திரட்டுவதற்குரிய ஒழுங்கமைந்த செயல் முறையே ஆய்வில் முன்னெடுக்கப்படுகின்றது. ஆய்வென்ற கல்விச் செயல்முறை அறிந்ததில் இருந்து அறியாததை நோக்கிச் செல்லும் இயக்கவிசையாகின்றது. ஆய்வின் வழியாகக் கண்டுபிடிப்புக்ககள் நிகழ்கின்றன. புத்தாக்கங்கள் முன்வைக்கப்படுகின்றன. பிரச்சினையை இனம் காண்பதும், பிரச்சினைகளுக்கு மீள்வடிவம் கொடுப்பதும் ஆய்வின் தொடக்கமாகின்றது. அனுமானங்களை (hypothesis) உருவாக்குதல், தரவுகளை சேகரித்தல், ஒழுங்கமைத்தல், புடமிடுதல், மதிப்பீடு செய்தல், தொகுத்தல், முடிவுகளை நோக்கிவருதல் என்றவாறு ஆய்வின் பரிமாணங்களை எவ்வளவுதான் விளக்கினாலும் ஆய்வு அத்துணை எளிதானதன்று. நடைமுறைகளிலிருந்து கோட்பாடுகளை நோக்கி நகர்தலும், கோட்பாடுகளிலிருந்து நடைமுறைகளை அணுகுதலும் ஆய்வின் பிற பரிமாணங்களாகின்றன. ஆய்வின் வழியாகக் கோட்ப்பாடுகள், விதிகள் (Laws) கண்டறியப்படுதலும் ஆய்வின் மேற்கிளம்பல் வடிவங்களாகின்றன. ஆய்வின் பிரயோகங்களிலே பயனுடைமை (Utility) உட் பொதிந்திருக்கும்.
ஆய்வின் நோக்கங்களைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம். 1. அறியாப் பொருளை அறியத் துணிதல். 2. மறைந்துள்ள நேர்வியங்களையும் (facts) உண்மைகளையும் (truths) கண்டறிய முயல்தல். 3. பிரச்சினைகளும் தீர்வுகளும் சார்ந்த புதிய புலக்காட்சியை (perception) ஏற்படுத்தல். 4. புதிய விபரிப்புக்களை முன்மொழிதல். 5. தொடர்புகளையும், தொடர்பற்றவைகளையும் பிரித்தறிதல். 6. மாறிகளுக்கிடையே (variable) இனங்களையும் அல் இனக்கங்களையும் காணுதல். 7. அனுமானங்களைப் பரீட்சித்தல்.8. புலமைப் பயிற்சிச் (academic exercise) சுவை காணுதல். 9. பிரச்சினை தொடர்பான எண்ணளவு பெறுமானங்களையும் பண்பளவு பெறுமானங்களையும் கண்டறிதல். 10. புதிய எண்ணக் கருக்களையும் (concepts) கோட்பாடுகளையும், விதிகளையும் நிறுவுதல், பழையவற்றை பொய்ப்பித்தல் அல்லது நிரூபித்தல் 11. அறிவுப் பரப்பில் புதிய தூண்டிகளையும், துலங்கல்களையும் முன் வைத்தல். 12. புதிய தீர்மானங்களைப் எடுப்பதற்கு உதவுதல். 13. ஆய்வுகள் வழியாக சமூகப் பயனுடமைக்கு உதவுதல்.14. பழைய ஆய்வுகளின் பொருண்மை நிலைகளைக் கண்டறிதல். 15. அறிவின் செயற்பாடுகள் தொடர்பான திறனாய்வுகளை முன்னெடுத்தல்.

English

Systematic procedures used in seeking facts or principles.