rights

உரிமைகள்

தமிழ் விளக்கம்

உரிமை என்பது, ஒரு பண்பட்ட சமுதாயத்தில், சட்டப்படி அல்லது ஒழுக்கநெறிப்படி ஒன்றைச் செய்தல் அல்லது செய்யாமல் இருத்தல், பெறுதல் அல்லது பெறாமல் இருத்தல் என்பவற்றுக்கான உரித்து ஆகும். உரிமைகள் மக்களிடையேயான தொடர்பாடலுக்கான விதிகளாக அமைவதால், அவை தனிமனிதர் மீதும், குழுக்கள் மீதும் கடமைகளையும் கட்டுப்பாடுகளையும் விதிக்கின்றன. எடுத்துக் காட்டாக ஒருவருக்கு வாழும் உரிமை உண்டெனில், மற்றவர்களுக்கு அவரைக் கொல்லும் சுதந்திரம் கிடையாது. உரிமை தொடர்பான கடந்தகாலக் கருத்துருக்கள் படிமுறை அமைப்புக் கொண்டவை. இவற்றின்படி, தகுதி அடிப்படையில் மனிதர்களுக்கு வெவ்வேறு விதமான உரிமைகள் வழங்கப்பட்டிருந்தன. சிலருக்கு மற்றவர்களிலும் அதிகமான உரிமைகள் வழங்கப்பட்டன. இதற்கு மாறாக உரிமைகள் குறித்த சமீபத்திய கருத்துருக்களெல்லாம் சமத்துவ நோக்கம் கொண்டவை. அதாவது, எல்லோருக்கும் சம உரிமை உண்டென்பவை. உரிமைகள் தொடர்பாக தற்காலத்தில் இரண்டு முக்கியமான கருத்துருக்கள் நிலவுகின்றன. ஒன்று, இயல்புரிமை என்னும் கருத்துரு ஆகும். இது, சில உரிமைகள் இயற்கையாக அமைந்தவை. அதை எந்த மனித சக்தியாலும் மாற்ற முடியாது என்கிறது. இரண்டாவது, சட்ட உரிமை என்னும் கருத்துரு. இது, உரிமை என்பது சமுதாயத்தால் ஆக்கப்படுவதும், அரசுகளால் நடைமுறைப்படுத்தப்படுவதும், மாற்றங்களுக்கு உட்படக்கூடியதுமான மனித உருவாக்கம் என்கிறது.
மனித உரிமை என்பது, எல்லா மனிதர்களுக்கும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும். இந்த உரிமைகள் 'மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளாகக் கருதப்படுகின்றன. இனம், சாதி, நிறம், மதம், பால், தேசியம், வயது, உடல் உள வலு ஆகியவற்றுக்கு அப்பால் ஒவ்வொரு தனி மனிதருக்கும் இருக்கும் இந்த அடிப்படை உரிமைகள், மனிதர் சுதந்திரமாக, சுமூகமாக, நலமாக வாழ அவசியமான உரிமைகளாகக் கருதப்படுகின்றன. மனித உரிமைகள் என்பதனுள் அடங்குவதாகக் கருதப்படும் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுள், வாழும் உரிமை, சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், சட்டத்தின் முன் சமநிலை, நகர்வுச் சுதந்திரம், பண்பாட்டு உரிமை, உணவுக்கான உரிமை, கல்வி உரிமை என்பன முக்கியமானவை.

English

1. The obligations of society to each of its members. 2. That which is legally or morally due to an individual by just claim. These are more specifically identified as civil rights, equal rights, and human rights.