self-actualization

தன்வலுவெய்தல், சுய இயல்பாதல், தனித்தன்மையடைதல், சுயநிறைவடைதல், தன்னிறைவடைதல், தன்நிலையடைதல்

தமிழ் விளக்கம்

ஒவ்வொரு மனிதரும் தன்னுடைய வாழ்நாளில் இவருக்கு நிகர் இவர்தான் என்கிற பெருமையை அடைய விரும்புவர். திசைகள் தன்னைத் திரும்பிப் பார்க்கும்படியாய் எதையாவது செய்ய மானிடருக்குள் ஒரு தவிப்பு ஏற்பட்டு, மரணத்தோடு நின்றுவிடாத மகத்தான சாதனையாளானாகப் பரிணமிக்க விருப்பம் / தேவை ஏற்படுகிறது. ஆபிரகாம் மாஸ்லோ என்ற உளவியலாளர் ஏறுநிறை அமைப்பில் அமைந்த பல்வேறு தேவைகளின் அடிப்படையில் உந்தப்பட்ட செயல்முறையையே மனித நடத்தை என்று விளக்கினார். மனித நடத்தை ஐந்து விதமான வாழ்க்கைத் தேவைகளால் கட்டமைக்கப்பட்டதென்றும், ஒரு தேவை நிறைவேறிய பின்னரே அடுத்த தேவையை நிறைவேற்ற மனிதர்கள் பொதுவாக முயற்சி செய்வார்கள் என்றும் மாஸ்லோ கண்டறிந்தார். மானுடத் தேவைகளை ஐந்தாகப் பிரித்த மாஸ்லோ, முதல் மூன்று தேவைகளை (1.உடலியற் தேவைகள் (Physiological needs), 2. பாதுகாப்புத் தேவை (Safety needs), 3. உளவியல் தேவைகள் / சமூகத் தேவை (அன்பும் உறவுத்தேவைகளும்) (Love/Belonging needs) என்பதை வாழ்வின் “அடிப்படைத் தேவைகள்” எனவும், மீதமுள்ள இரண்டு தேவைகளை 4. தன்மதிப்புத் தேவைகள், கௌரவத்தேவை (Esteem needs), 5. தன்நிலை உயர்வுத் தேவைகள், தன்வலுவெய்தல் தேவைகளை (Self-actualization) வாழ்வின் 'உயர்நிலைத் தேவைகள்” எனவும் பிரித்தார்.
இங்கு கொடுக்கப்பட்ட முதல் மூன்றும் அடிப்படைத் தேவை. அடுத்த இரண்டும் உயர்நிலைத் தேவை. உடலியல் தேவையிலிருந்து தன்னிலை வெளிப்படுத்தும் தேவை வரை வரிசையாகப் பூர்த்தி செய்யப்படுகின்றன. உடலியல் சார்ந்த தேவை என்பது பசி, தாகம், பாலுணர்வு, தூக்கம், வலியைத் தவிர்த்தல், பிராணவாயுத் தேவை ஆகியவை. உடலியல் தேவை பூர்த்தியாகும் நிலையில் அடுத்த நாளுக்கான பாதுகாப்புத் தேவைகளான உயிர்வாழப் பாதுகாப்பான இடம், உடமைக்கு, வருவாய்க்கு ஊறுகள் ஏற்படாத பாதுகாப்பான நிலை போன்றவற்றை அடைய விரும்புதல். உடலியற் தேவைகளும், பாதுகாப்புத் தேவைகளும் நிறைவேறிய பின்னர் உணர்வுபூர்வமான உறவுமுறைகளான நண்பர்கள், துணை, குடும்ப ஆதரவு போன்ற தேவைகளை அடைய முயலுவார். உறவுகள் பெற்று சமூகத் தேவை நிறைவேறியதும், தான் வாழும் அந்தச் சமூகத்தில் மதிப்பு மரியாதையுடன், அனைவரும் போற்றிப் புகழ வாழும் நிலையை அடைய மனித மனம் விரும்பும். பதவி, பணம், பகட்டு, அதிகாரம் ஆகியவை வாழ்க்கையில் முக்கியம் பெறும் நிலையை மனித மனம் அடையும். இறுதியாக ஒவ்வொரு மனிதரும், தன்வலுவெய்ய, தனித்தன்மையாக, சுயநிறைவடைய, தன்னிறைவடைய, தன்நிலை உயர விரும்புவர். இவருக்கு நிகர் இவர்தான் என்கிற பெருமையை அடைகிற தேவையை இது குறிக்கின்றது. திசைகள் தன்னைத் திரும்பிப் பார்க்கும்படியாய் எதையாவது செய்யத் தவிக்கின்றான் மனிதன். இது மஸ்லோவின் தேவைப் படிமுறையில் உச்சத்தில் உள்ள தேவையாகும். ஒரு நபர் தனது முழுமையை அடைவதற்கான தேடுகையாக இது அறியப்படுகிறது. ஏனையவற்றைப் போலன்றி இது முழுமையாக திருப்தியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. உண்மை, நாணயம், ஞானம் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. மேலும் ஒருவரிடத்தில் மறைந்துள்ள திறனை வெளிப்படுத்த்த வேண்டிய தேவையை / இயல்பை இது குறிக்கும். இதனை, ஒருவன் எப்படியாக இருக்க முடியுமோ, அப்படியாக இருக்க வேண்டும்' என ஒருவரை உந்தும் செயல் என மாஸ்லோ குறிப்பிடுகின்றார். சுய நிறைவினைக் கொண்ட இவர்களுக்கு, பூரணமான சந்தோசத்தையும், அமைதியையும் உருவாக்கும் அனுபவங்கள் ஏற்படும் தருணங்களை அடிக்கடி எதிர்நோக்குபவர்களாகக் காணப்படுவார்கள். இத்தேவைக்கு முயல்வதும், இத்தேவைப் பூர்த்தியும் வெளிப்படும் விதம் மனிதனுக்கு மனிதன் வேறுபடும். இத்தேவை உளரீதியாக ஒருவரை வலுப்படுத்தக் கூடியது. சுயநிறைவு அடைந்த ஒருவனை மஸ்லோ முழுமனிதன் எனக் கூறுகின்றார். ஆயினும் மாஸ்லோவின் கருத்துப்படி, மனிதரில் ஒரு சிலரே இத்தேவையை அடைபவர்களாக இருக்கின்றார்கள்.

English

A term referring to the full development of one's potential. According to Abraham Maslow, this is a basic human motivation toward which one strives, especially after fulfilling the basic needs, including physiological needs (food, air, water, and rest), safety needs (security, stability, and freedom from fear), needs of belonging (family, friends, affection, and intimacy), and esteem needs (self-respect and recognition of worth from others).