self-esteem

தன் மதிப்பு, தன்னபிமானம், தன்மானம், சுயாபிமானம், சுயகவுரவம்

தமிழ் விளக்கம்

மற்றவர்களுடைய மதிப்பீடுகள், மற்றவர்களின் அங்கீகாரம், புகழ்ச்சியுரையால் உருவாகாமல், ஒருவர் தன் உள்ளார்ந்த திறமையும், மதிப்பையும் தானே உணர்ந்து செயல்படும் நிலை. தன்மீது தானே மரியாதை, தன்மீது தானே நம்பிக்கை கொள்ளும் நிலை. 2. ஆபிரகாம் மாஸ்லோ என்ற உளவியலாளர் ஏறுநிறை அமைப்பில் அமைந்த பல்வேறு தேவைகளின் அடிப்படையில் உந்தப்பட்ட செயல்முறையையே மனித நடத்தை என்று விளக்கினார். மனித நடத்தை ஐந்து விதமான வாழ்க்கைத் தேவைகளால் கட்டமைக்கப்பட்டது என்றும், ஒரு தேவை நிறைவேறிய பின்னரே அடுத்த தேவையை நிறைவேற்ற மனிதர்கள் பொதுவாக முயற்சி செய்வார்கள் என்றும் மாஸ்லோ கண்டறிந்தார். மானுடத் தேவைகளை ஐந்தாகப் பிரித்த மாஸ்லோ, முதல் மூன்று தேவைகளை (1.உடலியற் தேவைகள் (Physiological needs), 2. பாதுகாப்புத் தேவை (Safety needs), 3. உளவியல் தேவைகள், சமூகத் தேவை (அன்பும் உறவுத்தேவைகளும் - Love/Belonging needs) வாழ்வின் “அடிப்படைத் தேவைகள்” எனவும், மீதமுள்ள இரண்டு தேவைகளை (4.தன்மதிப்புத் தேவைகள், கௌரவத்தேவை (Esteem needs), 5. தன்நிலை உயர்வுத் தேவைகள், தன்வலுவெய்தல் தேவைகளை (Self-actualization) வாழ்வின் 'உயர்நிலைத் தேவைகள்” எனவும் பிரித்தார்.
இங்கு கொடுக்கப்பட்ட முதல் மூன்றும் அடிப்படைத் தேவை. அடுத்த இரண்டும் உயர்நிலைத் தேவை. உடலியல் தேவையிலிருந்து தன்னிலை வெளிப்படுத்தும் தேவை வரை வரிசையாக பூர்த்தி செய்யப்படுகின்றன. உடலியல் சார்ந்த தேவை என்பது பசி, தாகம், பாலுணர்வு, தூக்கம், வலியைத் தவிர்த்தல், பிராணவாயுத் தேவை ஆகியவை. உடலியல் தேவை பூர்த்தியாகும் நிலையில் அடுத்த நாளுக்கான பாதுகாப்புத் தேவைகளான உயிர்வாழ பாதுகாப்பான இடம், உடமைக்கு, வருவாய்க்கு இடர்ப்பாடு ஏற்படாத பாதுகாப்பான நிலை போன்றவற்றை அடைய விரும்பும். உடலியற் தேவைகளும், பாதுகாப்புத் தேவைகளும் நிறைவேறிய பின்னர் உணர்வு பூர்வமான உறவு முறைகளான நண்பர்கள், துணை, குடும்ப ஆதரவு போன்ற தேவைகளை அடைய முயலுவார். உறவுகள் பெற்று சமூகத் தேவை நிறைவேறியதும், தான் வாழும் அந்தச் சமூகத்தில் மதிப்பு மரியாதையுடன், அனைவரும் போற்றிப் புகழ வாழும் நிலையை அடைய மனித மனம் விரும்பும். பதவி, பணம், பகட்டு, அதிகாரம் ஆகியவை வாழ்க்கையில் முக்கியம் பெறும் நிலையை மனித மனம் அடையும். இறுதியாக ஒவ்வொரு மனிதரும், தன்வலுவெய்ய, தனித்தன்மையாக, சுயநிறைவடைய, தன்னிறைவடைய, தன்நிலை உயர விரும்புவர். இவருக்கு நிகர் இவர்தான் என்கிற பெருமையை அடைகிற தேவையை இது குறிக்கின்றது.

English

An individual's sense of personal worth that is derived more from inner thoughts and values than from praise and recognition from others.