sin tax

பாவ வரி, கேளிக்கை வரி

தமிழ் விளக்கம்

வரி (tax) என்பது அரசோ அதுபோன்ற அமைப்புக்களோ, தனி நபர் அல்லது நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கும் நிதி ஆகும். வரி வசூலிக்கும் வேறு அமைப்புக்களாகப் பழங்குடி இனக்குழுக்கள், விடுதலைப் போராட்டக் குழுக்கள், புரட்சிக் குழுக்கள் என்பவற்றைக் குறிப்பிடலாம். இத்தகைய அமைப்புக்கள் வசூலிக்கும் வரிகள் பெரும்பாலும் சட்டபூர்வமானவையாகக் கருதப்படுவதில்லை. இந்த மாதிரி வசூலிக்கும் வரியைக் கப்பம் எனக் குறிப்பிடுவது உண்டு. மத்திய அரசு தவிர, உள்ளூராட்சி அமைப்புக்கள், மாநில அரசுகள் போன்ற பல துணை அரச அமைப்புக்களும் வரி வசூலிப்பதுண்டு. அரசு பலவிதமான வரிகளை வசூலிக்கின்றது. உற்பத்தி / கலால் வரி, ஏற்றுமதி - இறக்குமதி / சுங்க வரி, கேளிக்கை வரி, செல்வ வரி, சேவை வரி, தீர்வை, நிறுவன வரி, பலகணி வரி, மதிப்புக் கூட்டு வரி, மரண வரி, மறைமுக வரி, மின் வரி, வருமான வரி, விற்பனை வரி என்று அரசு பலவிதமான வரிகளை வசூலிக்கின்றது. சில பொருட்களின் முக்கியத்துவம் மற்றும் பயன் கருதி, குறைவான வரியோ அல்லது வரி விலக்கோ அரசு அளிக்கலாம். சில பொருட்களின் உற்பத்தியும், சில சேவைகளும் அவ்வளவு அத்தியாவசியமில்லை, அதனுடைய பயன்பாடு மக்களுக்கும், சமூகத்திற்கும் ஆரோக்கியமானதல்ல என்றோ, தீங்கு விளைவிக்கும் என்றோ அரசு கருதும் பட்சத்தில் அதன் உற்பத்தியைத் தடைசெய்யாமல், அதன் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் அதிகமாக வரி விதித்து, அதன் விலையைக் கூட்டுவதன் மூலம் மக்களின் பெருவாரிப் பயன்பாட்டிலிருந்து அதைக் குறைக்கலாம் என்று சில பொருட்களுக்கும், சேவைகளுக்கும் அதன் உற்பத்தி விலையைக் கருத்தில் கொள்ளாது அதிகமாக வரி விதிக்கும். எடுத்துக்காட்டாக புகையிலை, மதுபானங்கள் போன்ற பொருட்கள் மக்களின் ஆரோக்கியக் கேட்டிற்கு வழிவகுப்பதாலும், இரவு நேர கேளிக்கை விடுதிகள் மற்றும் சூதாட்ட விடுதிகள் குற்றங்கள் நடக்கக் காரணமாயிருப்பதாலும் இதற்கு அதிக வரி விதிக்கின்றன. இந்த அதிக வரியை பாவ வரி என்று மக்கள் வழக்காகக் குறிப்பிடுகிறார்கள். இது ஒருவகையில் உற்பத்தி அல்லாத சேவை வரியேயாகும். சில பொருட்களுக்கு உற்பத்தி நிலையிலும், விற்பனை நிலையிலும், பயன்பாட்டு நிலையிலும் அதிக வரி விதிக்கப்படுகிறது. இந்த அதிக வரிவிதிப்பே பாவ வரி என்றழைக்கப்படுகிறது.

English

An informal term referring to a tax to be paid on those particular goods and services that some citizens consider ignoble, such as cigarettes, alcoholic beverages, gambling winnings, and legal prostitution services.