sitdown strike

உள்ளிருப்பு வேலை நிறுத்தம், உள்ளிருப்புப் போராட்டம்

தமிழ் விளக்கம்

தொழிற்சாலை அல்லது நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், தங்கள் பணிக்கும் பணியிடத்திற்கும் சென்று, மிக அமைதியான முறையில், உள்ளிருந்து கொண்டே தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை பணி செய்ய மறுப்பது. தொழிற்சாலைகள் தவிர, சமூகப் பாகுபாட்டையோ அல்லது ஒரு சமூக நடைமுறையையோ மாற்ற விரும்பும் கோரிக்கையாளர்கள், தங்களுக்கு மறுக்கப்படும் சலுகைகள் கிடைக்கும் வரை, அமைதியாக சாத்வீகமான முறையில் தங்களுக்கு மறுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்துகொண்டு போராடுவது. எடுத்துக்காட்டாக இனப்பாகுபாட்டை கடைப்பிடித்த உணவகங்கள் மற்றும் பேருந்துகளில் தங்களுக்கு மறுக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்துகொண்டு கருப்பினத்தவர் போராடியது. தமிழ்நாட்டில் ஆலய நுழைவுப் போராட்டத்தை இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.
சாத்வீக எதிர்ப்பு என்பது தங்களுக்கு விரோதமாக அல்லது தங்களிடம் நியாயமற்று நடக்கும் நிறுவனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தும், அதனோடு ஒத்துழைக்க மறுத்தும் செய்யப்படும் வன்முறை தவிர்த்த போராட்ட முயற்சி. இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு மகாத்மா காந்தி அகிம்சை முறையில் போராடினார். ஒத்துழையாமை இயக்கம், வரிகொடா இயக்கம், உப்புச் சத்தியாகிரகம், அன்னியப் பொருட்களை பகிஷ்கரித்தல் போன்ற வன்முறை தவிர்த்த முறைகள் பெருவாரியான மக்களை சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுக்க வைத்து போராட்டத்திற்கு வலுசேர்த்தது. காந்தியடிகளின் அஹிம்ஸைக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட அமெரிக்கக் கருப்பினத்தவர், 1950 ஆம் ஆண்டு முன்னெடுத்த, பொதுப் போக்குவரத்தை பகிஷ்கரிக்கும் போராட்டம் பிரசித்தி பெற்றது. அமெரிக்கப் பேருந்துகளில், கருப்பினத்தவர்கள் கடைசி இருக்கைகளில் அமரவேண்டும், வெள்ளையர்கள் வரும் பட்சம் அவர்களுக்கு எழுந்து இடம் தரவேண்டும் என்ற நடைமுறையை, வன்முறையில் ஈடுபட்டு எதிர்ப்புத் தெரிவிக்காமல், பேருந்துகளில் பயணம் செய்வதைத் தவிர்த்ததன் மூலமாகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி அந்த நடைமுறையை மாற்றிக்கொள்ளும் அளவு சாத்வீகமான முறையில் அழுத்தம் கொடுத்துச் சாதித்தார்கள்.

English

Tactics used by labor unions and activists to interfere with the normal operation of some social organization by encouraging participants to occupy passively an important space to obstruct activities there. See also passive resistance and work-in.