social stratification
சமூக அடுக்கமைவு
தமிழ் விளக்கம்
பொருளாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரத்தைப் பொறுத்தும், அரசியல் அதிகார செல்வாக்கைப் பொறுத்தும், சமய சமூக அந்தஸ்தைப் பொறுத்தும், தனி நபரையோ, அல்லது சமூகக் குழுக்களையோ தாழ்வு நிலையில் இருந்து உயர் நிலை வரை படிநிலை அடுக்கமைவாகப் பிரிக்கலாம். இப்படிப் பிரிக்கப்ப்படும் பொழுது ஏற்படும் பிரிவுகள் வகுப்பு அல்லது வர்க்கம் என்று சமூகவியலில் குறிப்பிடுவர். (வர்க்கம் அல்லது வகுப்பு என்பது, ஒரே சமூகப் பொருளாதார நிலையில் உள்ள மக்களின் குழுவைக் குறிக்கும்) வர்க்கப் பிரிவினையின் ஒட்டுமொத்தக் கட்டமைப்பை, வர்க்கப் படிநிலை அடுக்கமைவு குறிக்கின்றது. பலவிதமான சமூக அடுக்கமைவுகள் சுட்டிக் காட்டப்பட்டாலும், பொருளாதார ரீதியில் மூவகையான வர்க்கங்களே எல்லோராலும் சுட்டிக் காட்டப்படுகிறது. அடித்தட்டு வர்க்கம் எனப்படுவது பொருளாதார சமூக அடுக்கமைவில் மிகவும் பின் தங்கிய மக்கள் குழுவாகும். நடுத்தர வர்க்கம் அல்லது நடுத்தர வகுப்பு என்பது, சமூகப் படிநிலை அமைப்பில் நடுவில் உள்ள வகுப்பினரைக் குறிக்கும். வெப்பேரிய (Max Weber) சமூக-பொருளாதாரச் சொற்பயன்பாட்டின்படி, தற்காலச் சமூகத்தின் சமூகப்பொருளாதார அடிப்படையில், தொழிலாளர் வகுப்புக்கும், உயர் வகுப்புக்கும் இடையில் இருக்கும் பரந்த அளவு மக்கள் கூட்டத்தை இது குறிக்கிறது. ஒரு சமூகத்தில் அரசியல், பொருளாதார, சமய, கல்வி, சமூக, ஊடகவியல் முனைகளில் ஆதிக்கம் அல்லது அதிகாரம் செலுத்தும் மக்கள்குழு உயர் வர்க்கம் எனப்படுகின்றனர். பொதுவான சமூகக் கட்டமைப்பில் ஒர் சிறு மக்கள் குழுவே பல துறைகளிலும் குவியப்படுத்தப்பட்ட அதிகாரத்தைக் கொண்டிருக்கும். தனி நபரோ, குடும்பமோ, சமூக் குழுக்களோ, நாடுகளோ தமது வர்க்க நிலையில் இருந்து மேல் நோக்கியோ கீழ்நோக்கியோ அசைவது தொடர்ந்து நிகழும் ஒரு செயற்பாடே. இளமையில் அடித்தட்டு வர்க்கத்தில் உள்ள ஒருவர், நல்ல கல்வி வேலை வாய்ப்புக்கள் பெற்று உயர் வர்க்கத்துக்கு வருவது சாத்தியமே. அதே போல், போர் அரசியல் சூழ்நிலைகளால் சீரழிந்து, உயர் வர்க்கத்தில் இருந்த ஒரு நாடும், இனமும் சிதைந்து அடித்தட்டு வர்க்கத்துக்கு வருவது சாத்தியமே.
English
The division of society into classes (for example, upper class, middle class, working class, lower class, and underclass) according to such criteria as economic level, educational level, or cultural value orientation.