socioeconomic class

சமூகப் பொருளாதார வர்க்கம்

தமிழ் விளக்கம்

வருமானம், வாழ்க்கைத்தரம், கல்வி, குடியிருப்பு இடங்கள், அரசியல் அதிகார செல்வாக்கைப் பொறுத்தும், சமய சமூக அந்தஸ்தைப் பொறுத்தும், தனி நபரையோ, அல்லது சமூகக் குழுக்களையோ தாழ்வு நிலையில் இருந்து உயர் நிலை வரை படிநிலை அடுக்கமைவாகப் பிரிக்கலாம். இப்படிப் பிரிக்கப்ப்படும் பொழுது ஏற்படும் பிரிவுகள் வகுப்பு அல்லது வர்க்கம் எனப்படும். சமூகவியலில் வர்க்கம் அல்லது வகுப்பு என்பது, ஒரே சமூகப் பொருளாதார நிலையில் உள்ள மக்களின் குழுவைக் குறிக்கும். கடந்த காலத்திலிருந்தே, சமூகத்தில் நிலவும் வகுப்பு (வர்க்க) வேறுபாடுகளைப் பற்றிப் பலரும் பலவிதமான கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார்கள். தத்துவஞானியான அரிஸ்டாட்டில், செல்வர், வறியவர், இடைநிலையினர் என மூன்று வகுப்பினரைப் (வர்க்கத்தினரைப்) பற்றிக் குறிப்பிட்டுள்ளார். மார்க்சியக் கோட்பாட்டை நிறுவியவரான கார்ல் மார்க்ஸ், முதலாளி வர்க்கம், தொழிலாளி வர்க்கம் என இரண்டு வகுப்பினர் (வர்க்கத்தினர்) பற்றியே பேசுகிறார். ஆடம் சிமித் என்னும் பொருளியல் அறிஞர் தொழிலாளர், நில உடமையாளர், வணிகர் என்னும் மூன்று வகுப்பினர் பற்றிக் குறிப்பிட்டார். பல்வேறு வகைப்பாடுகள் இருந்தாலும், அடித்தட்டு, நடுத்தர, உயர் தட்டு என்ற வகைப்பாடே பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. அடித்தட்டு வர்க்கம் எனப்படுவது பொருளாதாரச் சமூக அடுக்கமைவில் மிகவும் பின் தங்கிய மக்கள் குழுவாகும். இவர்களைப் பற்றி ஒட்டுமொத்தமாக வரையறை செய்வது கடினம். எவ்வளவு உழைத்தும், தொடர்ந்தும் பின் தங்கி நிற்கும் தொழிலாளர்கள், விவசாயிகள். குடி, போதை போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமைப்பட்டுப் பின் தங்கியோர், நோய், சமூகக் கட்டமைப்பு போன்ற இதர காரணிகளால் பின் தங்கியோர் எனப் பல தரப்பட்ட மக்கள் அடித்தட்டு வர்க்கம் என்ற வட்டத்துக்குள் வரக்கூடும். ஆங்கிலத்தில் working class, underclass என்றும் வேறுபடுத்திக் காட்டுவர். அதைத் தமிழில் உழைப்பாளிகள், விளிம்பு நிலை மக்கள் என்று குறிப்பர். நடுத்தர வர்க்கம் அல்லது நடுத்தர வகுப்பு என்பது, சமூகப் படிநிலை அமைப்பில் நடுவில் உள்ள வகுப்பினரைக் குறிக்கும். வெப்பேரிய (Weberian Sociology) சமூக-பொருளாதாரச் சொற்பயன்பாட்டின்படி, தொழிலாளர் வகுப்புக்கும், உயர் வகுப்புக்கும் இடையில் இருக்கும் பரந்த அளவு மக்கள் கூட்டத்தைக் குறிக்கிறது. நடுத்தர வர்க்கம் என்பதைத் தீர்மானிக்கும் அளவுகோல் வெவ்வேறு பண்பாடுகளில் வெவ்வேறு விதமாகக் காணப்படுகிறது. நடுத்தர வர்க்கத்தினர், நல்ல வாழ்க்கைத் தரத்தைத் தரக்கூடிய பொருளாதார வசதியைப் பெற்ற அல்லது பெறவல்ல மக்கள் குழுவினர் ஆவர். இவர்கள் மேட்டுக் குடியினர் அளவுக்கு அதிகாரத்தை அல்லது செல்வாக்கை குவியப்படுத்திக் கொண்டிருப்பதில்லை. பொதுவாக தொழிற்துறை வல்லுனர்கள், புலமையாளர்கள், அரச சேவையாளர்கள், ஊடகவியலாளர்கள் இந்த வர்க்கத்தில் அடங்குவர். பொருளாதார, வாழ்கைத்தர நிலைமைகளைப் பொறுத்து விவசாயிகளும் தொழிலாளர்களும் கூட இந்த வரையறைக்குள் வரக்கூடும். ஒரு சமூகத்தில் அரசியல், பொருளாதார, சமய, கல்வி, சமூக, ஊடகவியல் முனைகளில் ஆதிக்கம் அல்லது அதிகாரம் செலுத்தும் மக்கள்குழு உயர் வர்க்கம் எனப்படுகின்றனர். பொதுவான சமூகக் கட்டமைப்பில் ஒர் சிறு மக்கள் குழுவே பல துறைகளிலும் குவியப்படுத்தப்பட்ட அதிகாரத்தைக் கொண்டிருக்கும். மேட்டுகுடிகள், மேட்டுக்குடி வர்க்கம் என்ற சொற்தொடர் பயன்பாடும் உண்டு.

English

Categorization of groups of people according to specified demographic variables, such as level of income or education, location of residence, and value orientation. Sociologists often categorize the classes as "upper", "middle", "lower", and working class. Other observers make further distinctions, such as "upper middle class" and underclass.