special-interest group

சிறப்பு ஆர்வக் குழுக்கள், ஆர்வக்குழுக்கள், நலன் நாடும் குழுக்கள்

தமிழ் விளக்கம்

தங்களுக்குள் ஒத்த கருத்துடையவர்கள், அமைப்பாகவோ, அமைப்பற்றோ ஒன்றுகூடி, தங்களுக்குச் சாதகமாக அரசுக் கொள்கைகளையோ, அரசியல்வாதிகளின் ஆதரவையோ, சட்டத் திருத்தங்களையோ அல்லது பொது மக்களின் கருத்தையோ மாற்ற முயற்சி செய்பவர்களை சிறப்பு ஆர்வக்குழுவினர் எனலாம். இக்குழு உறுப்பினர்கள் குறிப்பிட்ட ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு அதற்கு ஆதரவாகவோ, எதிர்ப்பாகவோ ஊடகங்கள் அல்லது கூட்டங்கள் மூலமாக பரப்புரை செய்து, பொதுமக்கள் மற்றும் அரசியல் ஆதரவு பெற முயலுவர். சிறப்பு ஆர்வக்குழுக்களின் செயல்பாடுகள், அதன் உறுப்பினர்களுக்கே பயனுடையதாயிருந்தாலும் அது பொது மக்களுக்கும் பயன்படும் என்ற கருத்தை முன்வைத்து வாதிடுவர். வணிக நிறுவனங்கள் (corporations), தொண்டு நிறுவனங்கள் (charitable organizations), மனித உரிமைக்குழுக்கள், குடியிருப்புக் குழுக்கள் (neighborhood associations), தொழிற்சங்கங்கள் (trade unions), தொழில்சார் குழுக்கள் (professional groups) என்று பொதுவான நோக்கினடிப்படையில், கூட்டாகச் செயல்படும் அனைத்துக் குழுக்களையும் இப்பொதுவான சொல்லால் குறிக்கலாம்.
பார்க்க: Public Interest Groups - பொது ஆர்வக்குழுக்கள் - ஆர்வக்குழுக்கள் என்பது ஒரு குறிப்பிட்ட குறியிலக்கக் குழுக்கள், தங்களுடைய சமூகப்பொருளாதார, கலாச்சார, அரசியல் நிலைப்பாடுகளை தக்கவைத்துக் கொள்ளவும் அதை மேம்படுத்திக்கொள்ளும் செயலில் ஈடுபடுபவர்கள். எடுத்துக்காட்டு தொழிற்சங்கங்கள், ஓய்வூதியர் சங்கங்கள், மாற்றுப்பாலினக் குழுக்கள். மாறாக, பொது ஆர்வக்குழுக்கள் என்பது பொதுமக்களைப் பரவலாகப் பாதிக்கும் விசயங்களை மாற்றவும் தடுக்கவும் முயற்சிப்பவர்கள். எடுத்துக்காட்டு சுற்றுச் சூழல் ஆர்வக் குழுக்கள், மனித உரிமை ஆர்வக்குழுக்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புக் குழுக்கள்.
Pressure Groups - அழுத்தக் குழுக்கள், செல்வாக்குள்ளவர்களின் சேர்க்கை, (ஒன்றை செய்துதர) நெருக்கடி கொடுக்கும் குழுக்கள், உள்ளுந்தல் குழு - அரசுக் கொள்கை முடிவுகளிலோ, அரசு சட்டமியற்றுதலிலோ, அரசியல்வாதிகளிடம் சிலவற்றிற்கு முன்னுரிமை கொடுக்கச் சொல்லியோ, வணிக அல்லது பிற நிறுவனங்களின் நடைமுறையிலோ, பொதுமக்கள் எண்ணப்போக்கிலோ தாங்கள் விரும்பும் தாக்கத்தை அல்லது தங்களின் குறிக்கோளை அடைய முயலுபவர்களை அழுத்தக்குழுக்கள் எனலாம். அழுத்தக் குழுக்கள், ஆதரவுக் குழுக்கள், பிரச்சாரக் குழுக்கள், ஆர்வக் குழுக்கள், அல்லது சிறப்பு ஆர்வக் குழுக்கள் (பிரத்தியேக ஆர்வம்) (pressure groups, lobby groups, campaign groups, interest groups, or special interest groups) என்று பல பெயர்களில் செயல்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் அல்லது தனிமனிதர்களின் கூட்டமைப்பு முயற்சிகளை இச்சொல் குறிக்கும். ஊடகப் பிரச்சாரங்கள், அரசியலனைவு நாடுதல், வாக்காளர்களிடம் பிரச்சாரம் செய்தல், மக்கள் கவனத்தைக் கவரும்படியான போராட்ட முறைகள் போன்ற செயல்பாடுகளின் மூலம் தங்கள் கருத்துக்களை எடுத்து வைப்பர். அனைவருக்கும் பயன்படும்படியான செயல்பாடுகளில் ஈடுபடும் குழுக்களைப் பொது ஆர்வக் குழுக்கள் (public-interest group) என்றும், சில பிரத்யேகக் குறிக்கோள்களை முன்னெடுக்கும் குழுக்களை சிறப்பு ஆர்வக் குழுக்கள் (special-interest group) என்றும் சொல்வர். ஒரு குறிப்பிட்ட நிலையைத் தக்க வைக்க (maintain the status quo) முயலும் குழுக்களை ஆர்வக் குழுக்கள் என்றும், மாற்றத்தை ஏற்படுத்த முயலும் (change the status quo). குழுக்களை அழுத்தக் குழுக்கள் என்றும் வேறுபடுத்திக் காட்டுவதுமுண்டு.

English

A formal or informal collective of like-minded individuals who seek to influence the policies of governments, political candidates, agencies, proposed laws, or the general public. The group has in common one issue that it seeks to promote through media events, legislative advocacy, lobbying, and political action committees (PACs). The specific special-interest often tends to benefit of the group's members, rather than the public at large (although members of the group may believe its goal has public benefits as well).