sympathetic nervous system
பரிவு நரம்புமண்டலம், உணர்ச்சி செலுத்தும் நரம்பு மண்டலம்
தமிழ் விளக்கம்
நரம்புத் தொகுதி (Nervous system) அல்லது நரம்பு மண்டலம் என்பது விலங்குகளில் காணப்படும், இச்சைவழி (Voluntary), மற்றும் இச்சையின்றி (Involuntary) நிகழும் அனைத்து இயக்கங்களையும் ஒருங்கிணைப்பதற்கும், விலங்கிற்கு உள்ளேயும், வெளியிலான சூழலுடன் தொடர்புற்றும் தகவல்களையும், சைகைகளையும் விலங்கின் வெவ்வேறு பகுதிகளுக்கிடையில் கடத்துவதற்குமான சிறப்பாக்கம் கொண்ட ஒரு தொகுதியாகும். நரம்புத் தொகுதி இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றது. இவை, மைய நரம்பு மண்டலம், புற நரம்பு மண்டலம், என்பனவாகும். மையநரம்பு மண்டலம் எலும்புகளால் பாதுகாக்கப்படுகிறது. மூளையும், தண்டுவடமும் மைய நரம்பு மண்டலமாக (Central nervous system) அமைகின்றன. மூளையில் இருந்து வரும் 12 ஜோடி நரம்புகளும், தண்டுவடத்தில் இருந்து புறப்படும் 31 ஜோடி நரம்புகளும் மேற்பரப்பு (Peripheral nervous system) நரம்பு மண்டலம் ஆகும்.. மூன்றாவதாகக் குறிப்பிட வேண்டியது, தன்னியக்க நரம்பு மண்டலம் (Autonomic nervous system). இதை மேற்பரப்பு மண்டலத்தின் சிறப்புப் பகுதி எனலாம். மூளையின் கட்டுப்பாடு இன்றித் தாமே நிகழும் சுவாசம், செரிமானம் முதலியவற்றை முறைப்படுத்துவது தன்னியக்க மண்டலம். அதன்மூலம் நிலையான உட்புறச் சூழல், உடலைக் காப்பதற்கு வசதி ஏற்படுகிறது. தன்னியக்க மண்டலம் என்று கூறினாலும் இது மைய நரம்பு மண்டலத்துடன் உறவில்லாமல் தனியாட்சி நடத்தவில்லை. தன்னியக்க மண்டலச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நரம்பு மையங்கள் மைய நரம்பு மண்டலத்திலேயே உள்ளன. தன்னியக்க நரம்பு மண்டலம், பரிவு நரம்பு மண்டலம் (sympathetic nervous system), துணைப் பரிவு நரம்பு மண்டலம் அமைப்பு (para sympathetic nervous system) என்று இரண்டு பிரிவுகளாக உள்ளது. உடலின் செயல் அதிகரிக்கும்போதும், வேகம் கூடும்போதும், நெருக்கடி நிலைகளிலும், உடலின் தேவைகளுக்கு உகந்தவாறு செயல்படுவது பரிவு நரம்பு மண்டலமாகும். தசைகளுக்குக் கூடுதலாக ரத்தத்தை அனுப்புவது, குறைவான ஒளி உள்ளபோது கண்களின் பாவைகளை விரிவாக்குவது போன்றவை பரிவு நரம்பு மண்டல அமைப்பின் செயல்களில் அடங்கும். பரிவு நரம்பு மண்டலச் செயல்பாடுகளுக்கு எதிராக வினைபுரிவது துணைப் பரிவு நரம்பு மண்டலம். இதயத் துடிப்பை மெதுவாக்குவதும், ரத்தத்தைத் தசைகளில் இருந்து இரைப்பைக்கும், குடல்களுக்கும் திருப்பி விடுவதும், கண்களின் பாவைகளைச் சுருங்கச் செய்வதும் துணைப் பரிவு நரம்பு மண்டலச் செயல்களில் அடங்கும். உறங்கும்போது துணைப் பரிவு மண்டலம் உடலின் செயல் வேகத்தைத் தணிக்கிறது. இரண்டு மண்டலங்களின் செயல்களைச் செம்மையாக ஒத்திசைவு காணச் செய்வது மைய நரம்பு மண்டலம்.
English
The part of the nervous system that controls the involuntary responses to perceived danger, such as increasing the rate of heartbeat and dilation of the pupils.