tetanus

தசைகளை கடினமாக இறுக செய்யும் நோய். ரண ஜன்னி, தசைவிறைப்பு, நரம்பிசிவு நோய்

தமிழ் விளக்கம்

பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை எல்லோரையும் தாக்க வல்லது டெட்டனஸ் நோய். இந்த நோய்க்கு இழுப்புநோய், வில்வாத ஜன்னி, வாய்ப்பூட்டு நோய், ரணவாத ஜன்னி, நரம்பிசிவு நோய் என்று பல பெயர்கள் உண்டு என்றாலும், ஓரளவு படிப்பறிவு உள்ளவர்களிடம் ‘டெட்டனஸ்’ என்ற பெயரே பிரபலம். இந்நோய் ‘கிளாஸ்ட்ரிடியம் டெட்டனி’ எனும் பாக்டீரியாக் கிருமியால் வருகிறது. இது மண், மனித மலம், விலங்குகளின் சாணம், துருப்பிடித்த உலோகப் பொருள்கள் போன்றவற்றில் உயிர் வாழும். உடலில் உள்ள திறந்த காயத்தின் வழியாக, இரத்தக் கசிவின் வழியாக இக்கிருமி உடலுக்குள் நுழைவது ஒரு பொதுவான வழி. இது தவிர முள், துருப்பிடித்த ஆணி, கம்பி, ஊக்கு போன்றவை குத்தும்போது அவற்றின் வழியாகவும் உடலுக்குள் நுழைந்துவிடும். தொற்று நீக்கம் செய்யாமல் போடப்படும் ஊசிகள், சுத்தம் பராமரிக்கப்படாமல் செய்யப்படும் கருச் சிதைவுகள், கவனக்குறைவாகச் செய்யப்படும் அறுவை சிகிச்சைகள் போன்றவற்றின் மூலமும் இந்தக் கிருமி உடலுக்குள் புகுந்துகொள்ளும். நகச்சுற்று, சொறி, சிரங்கு, தீக்காயம், செவியில் சீழ் வடிதல், தொப்புள்கொடி புண், செருப்புக்கடி, சூடுபோடுதல், பச்சை குத்துதல் போன்றவை இந்தக் கிருமியின் வேறு சில நுழைவாயில்கள். காயத்தில் அல்லது புண்ணில் புகுந்துகொண்ட கிருமிகள் அங்குள்ள திசுக்களை அழிக்கும். சீழ் பிடிக்க வைக்கும். அப்போது புறநச்சுப் பொருள் (Exotoxin) ஒன்றை வெளிவிடும். இதுதான் ஆபத்தானது. இது மூளைக்குச் சென்று நரம்புத் திசுக்களை அழிக்கும். இதனால் உடலில் தசை இயக்கங்கள் பாதிக்கப்படும். இந்த நோய் வந்துவிட்டால் வாயைத் திறக்க முடியாது. கழுத்தை அசைக்க முடியாது. திடீரென்று முதுகு வில் போல் வளையும். வயிறு மரப்பலகை போல் இறுகி விடும். கை, கால் தசைகள் விறைத்துக் கொள்ளும். நோயாளியின் உடலில் வெளிச்சம் பட்டால் உடனே வலிப்பு வரும். சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். இவற்றைத் தொடர்ந்து உயிரிழப்பும் ஏற்படும். டெட்டனஸ் நோயாளியை மருத்துவமனையில் அனுமதித்துத்தான் சிகிச்சை தர வேண்டும். வெளிச்சம் அதிகமில்லாத, அமைதியான தனி அறையில் இவர்களுக்குச் சிகிச்சை தரப்படும். தசை இறுக்கத்தைக் குறைக்கும் மருந்துகளும் உறக்க மருந்துகளும் தரப்படும். டெட்டனஸ் கிருமிகளை அழிப்பதற்கான பெனிசிலின் போன்ற ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளும் தரப்படும். இவை எல்லாவற்றையும்விட முக்கியமானது ‘ஆன்டி டெட்டனஸ் சீரம்’ (Anti Tetanus Serum - ATS) என்ற நச்சு முறிவு மருந்துதான். இது டெட்டனஸ் கிருமிகள் உடலில் உற்பத்தி செய்திருக்கின்ற புற நச்சுப்பொருளின் வீரியத்தைக் குறைத்து நோயின் பாதிப்பிலிருந்து நோயாளியை விடுவித்து உயிரைக் காக்கிறது.

English

A disease characterized by violent tremor, spasms, muscle contraction and stiffness, and sometimes death, caused by certain bacilli entering the body through wounds. The disease is preventable by inoculation.