thrombosis
குருதியுறைவு, இரத்த உறைவு, நாடிநாளங்களிற் குருதிக் கட்டு, குருதியடைப்பு, குழலியக்குருதியுறைமை, குருதி நாடி முற்றாகச் சுருங்குதல், குருதிப்படிவம் உறைவு, நாளங்களில் குருதி உறைதல், இரத்த உறைதடை
தமிழ் விளக்கம்
குழலியக் குருதியுறைமை அல்லது இரத்தக் கட்டியடைப்பு அல்லது குருதி உறைதல் திரைப்புவாதை அல்லது துரோம்போசிஸ் (Thrombosis) என்பது குருதிக் கலன்களின் உள்ளே, குருதி உறைகட்டிகள் (blood clot) உருவாகி, குருதிச் சுற்றோட்டத் தொகுதியூடாக நடைபெறும் குருதி ஓட்டத்தில் தடை ஏற்படக் கூடிய நோய் நிலையாகும். வழமையாக, அடிபட்ட அல்லது காயப்பட்ட இடத்தில் குருதி வெளியேறி வீணாகாமல் இருக்க உடல் இவ்வகையான உறைகட்டிகளை உருவாக்கி குருதி வெளியேறுவதைத் தடுக்கின்றது. அதாவது அந்நிலைகளில் குருதிக் கலனின் சுவர் பாதிப்படைந்து குருதி வெளியேறுவதை குருதி உறைதல் தடுக்கும். ஆனால் அவ்வாறின்றி, இதே தொழிற்பாடு குருதிக்கலன்களுக்கு உள்ளே ஏதேனும் காரணத்தால் நிகழ்ந்தாலும், இக்கட்டிகள் உருவாகின்றன. அவ்வாறு நிகழ்வது இயற்கைக்கு மாறான ஒரு நோய் நிலையாகும். இந்நோய் அல்லது உடலியக்கச் சிக்கலில் உருவாகும் குருதி உறைகட்டிக்கு திரோம்போசு என்று பெயர். இந்தக் குறைபாடு உள்ளவர்களில், இரத்தக்குழாய் பழுதடையாவிட்டாலும் இரத்தக்கட்டிகள் உருவாகி உடலியக்கத்துக்குப் பெரும் இடர் உண்டாக்குகின்றது. இப்படி உருவான இரத்தக்கட்டிகள் சில சமயம் உருவான இடத்தில் இருந்து பிரிந்து / கழன்று மற்ற இடங்களுக்குச் செல்கின்றது. இவ்வகையான நகரும் திண்மப்பொருளை மருத்துவத்தில் எம்போலசு (embolus) என்கின்றனர். இந்நோயால் உயிரிழப்பு போன்ற கடும் விளைவுகளும் ஏற்படலாம். ஓர் தமனியினுள் தோன்றும் இரத்தக் கட்டியினால் இரத்த ஓட்டம் தடைப்படலாம். இதனால் உடல் உறுப்புகளுக்கும் இழையங்களுக்கும் செல்லவேண்டிய ஆக்சிசன் சென்றடையாது. இதயத்தசைத் தமனிகளினுள் இரத்தக் கட்டி ஏற்படின், அது இதயச்சுவர் சிரை குழலியக் குருதியுறைமை (Coronoary thrombosis) எனப்படும். இந்நிகழ்ச்சியால் மாரடைப்பு ஏற்படும். மூளைக்குச் செல்லும் தமனியில் ஏற்படும் குருதி உறைகட்டியால் மூளைக்குச் செல்லும் தமனிகளில், குழலியக்குருதியுறைமை (Cerebral thrombosis) ஏற்பட்டு பக்கவாதம் (stroke) வரலாம். தமனியின் புழையின் மேற்பரப்பளவை 75% மேலாக ஒரு குருதி உறைகட்டி ஆக்கிரமிக்கும் பொழுது, லாக்டிக் அமிலம் போன்ற வளர்சிதைமாற்ற பொருட்கள் திரள்வதாலும், இழையங்களுக்குக் கிடைக்கும் பிராணவாயு அளவு குறைவதாலும், தீங்கான அறிகுறிகள் ஏற்படும் அளவிற்கு, இழையங்களுக்குச் செல்லும் இரத்த ஒட்டம் குறைகிறது. 90 % மேலான தடை என்பது பிராணவாயு அல்லது ஆக்சிசன் முற்றிலும் இல்லாத நிலையான அனாக்சியா (Anoxia) என்னும் உயிர்வளி அற்ற நிலை, மற்றும் ஆக்சிசன் குறைவால் ஏற்படும் உயிரணு இறப்பின் ஒரு வகையான இழையநசிவு (Necrosis) ஆகியவற்றில் முடியக்கூடும்.
English
Clogging of a blood vessel as a result of a blood clot. In a coronary thrombosis, the coronary arteries that supply blood to the heart are clogged, resulting in damage to the heart muscle.