treatment

சிகிச்சை, நடத்துதல், நடத்துமுறை, மருந்து பண்டுவம், கையாளும் விதம், பண்டுவம், பக்குவப்படுத்தல், பதப்படுத்தல்

தமிழ் விளக்கம்

ஒரு பிரச்சனையின் (ஒழுங்கின்மை, குழப்பம், கலவரம்), இயலாமையின் அல்லது ஒரு நோயின் தீவிரத்தைக் குறைப்பது அல்லது அதை முற்றிலும் இல்லாமலாக்குவதை சிகிச்சை எனலாம். இதை ஒன்றை சரியாகப் புரிந்து கொண்டு (study), சொல்லப்பட்ட குணங்குறி மூலம் நோயை / பிரச்சனையைக் கண்டறிதல் (diagnosis), கண்டறிந்த பிரச்சனையைத் தீர்த்தல் (treatment) என்ற வரிசையில் கடந்த காலத்தில் சமூகப்பணியாளர்கள் பயன்படுத்தினார்கள். சிகிச்சை என்பது மருத்துவ முன்மாதிரியை அடிப்படையாகக் கொண்டிருந்ததாலும், சமூகப்பணியாளர்களின் பணித்தன்மையை அது சரியாகப் பிரதிபலிக்காததாலும், சிகிச்சை என்பதற்கு மாற்றாக தலையீடு என்ற வார்த்தையை சமூகப்பணியாளர்கள் பயன்படுத்துகிறார்கள்.
பார்க்க: Intervention - தலையிடுதல், அக்கறை காட்டுதல், பரிந்துரைத்தல் - Intervention என்கிற ஆங்கில வார்த்தையைத் தலையிடுதல் அல்லது இடைநிற்றல் அல்லது குறுக்கிடுதல் என்று ஓரர்த்ததுடன், விரிவற்ற முறையில் மொழிபெயர்ப்பது / பொருள் கொள்வதென்பது, சமூகப்பணியிலும், பிற மானுட சேவைத் துறைகளிலும், அது விரிவான பொருளில் பயன்படுத்தபடும் முறையைப் பிரதிபலிக்காது. சமூகப்பணியாளர்களின் பணித்தன்மையை, செயல்முறைகளைக் கவனித்தால், பல செயல்களை உள்ளடக்கிய விரிவான பொருளில் intervention என்ற சொல் பயன்படுத்தப்படுவதை உணரலாம். அதை இடையிட்டுப் பரிந்து பேசுதல், பரிந்தாதரித்து வேண்டுதல், சமூகப் பிரச்சனைகள் மீது அக்கறை / அறிவைச் (தலை) செலுத்துதல், ஈடுபாடு காட்டல், முகமலர்ந்து இனிய கூறுதல், கருணையோடு நோக்குதல், தலையளி செய்தல் (வரியவர்களிடமும், எளியோரிடமும் இரக்கம் காட்டல்), நன்மையை வளர்த்தல், (தீயதை) தாமதப்படுத்தல், அருள்செய்தல், போன்ற செயல்களைப் பிரதிநிதிபடுத்தும் பொருளிலும் பயன்படுத்துகின்றனர்.
நெருக்கடியான சந்தர்ப்பங்களிலோ, நெருக்கடிக்கு உள்ளான நபர்களுக்கோ உதவ, அதோடு சம்பந்தப்பட்டவர்கள், நிபுணத்துவம் (professional) உள்ள நபர்களின் உதவியை, தலையீட்டைப் பெற எடுத்துக்கொள்ளும் முயற்சியும் இதிலடங்கும். திட்டமிட்டோ, திட்டமிடாமலோ, விரும்பியோ, தற்செயலாகவோ சமூக உறவுகளுக்குள் ஏற்பட்ட மாற்றங்களை அதனால் ஏற்பட்ட பிணக்குகளை சரிசெய்யத் 'தலையிடல்' தேவைப்படுகிறது. நெருக்கடிகளைத் தவிர்க்கவோ அல்லது அதை இல்லாதாக்குவதற்கோ, சமூகப்பாதுகாப்பு முறைகளை முடுக்கிவிடவோ அல்லது ஒருங்கு திரட்டவோ, தீமையைக் குறைக்கவோ அல்லது இல்லாததாக்கவோ அல்லது நன்மையை அதிகமாக்கவோ செய்யப்படும் செயல்பாடுகளையெல்லாம் தலையீடு என்ற சொல்லாட்சியாலே சமூகப்பணியாளர்கள் குறிக்கின்றனர்.
முறையான மதிப்பீடுகளுக்குப் பின்னர், ஒரு செயலுக்கு பரிகாரம் அல்லது நிவாரணம் கிடைக்கவோ, இயல்பான நிலை தொடரும் பட்சத்தில் சமூக, கல்வி, பொருளாதாரத் தளங்களில் பிரச்சனை உருவாவதைத் தடுக்கவோ திட்டமிடுவதையும் தலையீடு என்ற வார்த்தையாலே குறிக்கப்படுகிறது. 2. உதவி செய்தல், சிகிச்சையளித்தல் என்ற சொற்களைக் கொண்டு சமூகப்பணியாளர்கள் தங்களின் பணித்தன்மையை கடந்த காலத்தில் குறித்தனர். அந்த சொற்பிரயோகம் சமூகப்பணியின் விரிவான தன்மையை, உதவியோ, சிகிச்சையோ தேவைப்படாத அளவிற்கு பிரச்சனைகளைத் தடுக்க அவர்கள் எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், வளமான வாழ்விற்காக அவர்கள் திட்டமிடுதலையும் உள்ளடக்கி குறிப்பதில்லையாகையால், தலையீடு என்ற சொற்பிரயோகத்தை பயன்படுத்தத் தொடங்கினர்.
தலையீடு என்ற சொற்பிரயோகம் உளப்பிணி சிகிச்சை (psychotherapy), பரிந்து பேசுதல் (advocacy), சமூகத் திட்டமிடல் (social planning), சமுதாய அமைப்பாக்கல் (community organization), தேவையான ஆதாரங்களைத் திரட்டுதல் மற்றும் அதை விரிவாக்குதல் (finding and developing resources) போன்ற செயல்களையும் குறிக்கின்றது.

English

Correcting or alleviating a disorder, disease, or problem. This term was once commonly used, in addition to "study" and "diagnosis," in social work; however, the preferred term now is intervention, because it does not have the medical connotation and implies an orientation toward resolving a wider range of problems. See also therapy and typology of casework treatment.