typhoid fever

டைபாய்டு காய்ச்சல், நச்சுக் காய்ச்சல், குடற் காய்ச்சல், குடற் புண் காய்ச்சல்

தமிழ் விளக்கம்

நச்சுக் காய்ச்சல் (typhoid fever) என்று பல பெயர்களில் அழைக்கப்படும் இக்காய்ச்சல், சால்மோனல்லா டைஃபி (Salmonella typhi) என்ற நுண் உயிரியால் ஏற்படும் ஒரு வியாதி ஆகும். இது மனிதர்களை மட்டுமே தாக்கும். எங்கெல்லாம் சுத்தம் குறைவாக உள்ளதோ அங்கெல்லாம் இந்த வியாதி வரும். நோயாளியின் சிறுகுடலிலும் அதைச் சார்ந்த நிணநீர்த் திசுக்களிலும் (Lymphoid tissues) இந்தக் கிருமிகள் வசிக்கின்றன. மலம், சிறுநீர் ஆகியவை மூலம் இவை வெளியேறி மண்ணில் கலக்கின்றன. இதன் காரணமாக அசுத்தமான இடங்களிலும், பொதுமக்கள் கழிப்பிடங்களாகப் பயன்படுத்தும் தெரு ஓரங்களிலும் இந்தக் கிருமிகள் கோடிக்கணக்கில் வாழ்கின்றன. கண்ட இடங்களில் உட்காரும் ஈக்கள் இந்தக் கிருமிகளைச் சுமந்து கொண்டு தெருவிலிருந்து வீட்டிற்கு வருகின்றன. வீட்டில் முறையாகப் பாதுகாக்கப்படாத குடிநீரிலும் உணவிலும் இவை கலந்துவிடுகின்றன. இந்த அசுத்த உணவையும் குடிநீரையும் பயன்படுத்துவோருக்கு டைபாய்டு காய்ச்சல் வருகிறது. நாட்பட்ட காய்ச்சல், உடல்வலி, தலைவலி இந்த நோயின் முக்கிய அறிகுறிகள். ஒவ்வொரு நாளும் காய்ச்சல் படிப்படியாக அதிகரிக்கும். தலைவலி கடுமையாகும். நாக்கில் வெண்படலம் தோன்றும். பசி இருக்காது. வாந்தி, வயிற்றுவலி வரும். உணவைச் சாப்பிட முடியாது. இதனால், நோயாளிக்குச் சோர்வு அதிகரித்து, மயக்கம் வரும்.இந்தக் காய்ச்சல் குழந்தைகளைப் பாதிக்கும்போது, ‘காய்ச்சல் வலிப்பு' (Febrile Fits) வரலாம். குடலில் ரத்தக்கசிவு ஏற்படலாம். ரத்த வாந்தி உண்டாகலாம். நோயின் தொடக்க நிலையில் சிகிச்சை பெறத் தவறினால், ரத்தத்தில் இந்தக் கிருமிகளின் நச்சுத்தன்மை அதிகரித்து, ‘நச்சுக்குருதிநோய்’ (Septicaemia) ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து நேரலாம். .

English

An infectious disease, spread primarily through contaminated water or food. Symptoms include high fever, diarrhea or constipation, red spots on the body, enlargement of the spleen, and damage to various organs. Its incidence has been reduced dramatically through vaccination, sanitary laws pertaining especially to food handlers, and laws promoting a cleaner and safer environment.