U.N. Convention on the Rights of the Child
சிறுவர் உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கை
தமிழ் விளக்கம்
பார்க்க: (ஐ. நா. சபையின்) குழந்தைகளின் உரிமைச் சாசனம் - குழந்தைகளின் உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகள் அமைப்பின் விதிமுறைகள். அனைத்துக் குழந்தைகளும் சம உரிமைகளும், சமமான மதிப்பும் கொண்டவர்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் தன் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படவும், துஷ்பிரயோகத்திலிருந்தும், சுரண்டலிலிருந்தும் பாதுகாக்கப்படவும், தன் கருத்தை வெளிப்படுத்தவும், மதிக்கப்படவும் உரிமை உள்ளது. இந்த உரிமைகள் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் பொருந்தும். அனைத்துக் குழந்தைகளும் சம மதிப்பு உடையவர்கள், சம உரிமைகள் கொண்டவர்களாதலாள், அவர்களின் தோற்றம், நிறம், பாலினம், மதம் மற்றும் அவர்கள் கொண்ட கருத்துக்கள் காரணமாக, யாரும் அவர்களைப் பாரபட்சமாக நடத்தக் கூடாது. வாழ்வதற்கான உரிமையும் முன்னேறுவதற்கான உரிமையும், ஒரு பெயரைக் கொண்டிருக்கவும், ஒரு தேசிய இன அடையாளத்துடனிருக்கவும் குழந்தைகளுக்கு உரிமையுண்டு. பெற்றோருடன் வாழ்வது ஆரோக்கியமற்றதாக இருந்தாலொழிய ஒவ்வொரு குழந்தையும் பெற்றோருடனிருக்கவும், பெற்றோரால் வளர்க்கப்படவும் உரிமையுண்டு. குழந்தைகள் தாங்கள் கருத்தை வீட்டில், பள்ளியில், அதிகாரிகளிடத்தில், நீதிமன்றங்களில், குழந்தைகளுக்குத் தொடர்புள்ள அனைத்து விஷயங்களிலும் சொல்வதற்கும், கலந்தாலோசிக்கப்படுவதற்கும் உரிமை தரப்படவேண்டும். குழந்தைகள் வளர்ப்பிலும், முன்னேற்றத்திலும் குழந்தைகளின் பெற்றோருக்குக் கூட்டுப் பொறுப்பு உள்ளது. குழந்தைகளின் விருப்பங்களுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அனைத்து வகையான வன்முறைகள், புறக்கணிப்பு, துஷ்பிரயோகம், மோசமாக நடத்தப்படுதல் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கப்பட குழந்தைகளுக்கு உரிமை உள்ளது. பெற்றோராலோ பிற பாதுகாவலர்களாலோ குழந்தைகள் சுரண்டப்படக் கூடாது. குழந்தைகள் குடும்பத்தை இழந்திருந்தால், அவர்கள் உரிய பராமரிப்புப் பெற உரிமை உள்ளது. ஒரு நாட்டிலிருந்து குழந்தைகள் வெளியேறும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டால், குழந்தைகள் குடியேறும் புதிய நாட்டிலுள்ள குழந்தைகளுக்கு உள்ள உரிமைகள் அனைத்தும் குடியேறிய குழந்தைகளுக்கும் உண்டு. குழந்தைகள் தனியாக இருக்கும் பட்சம் சிறப்புப் பாதுகாப்பு மற்றும் உதவி பெற உரிமையுள்ளது. முடிந்தால் குழந்தைகள் அவர்களின் குடும்பத்தினருடன் மீண்டும் ஒன்று சேர்க்கப்பட வேண்டும். அனைத்துக் குழந்தைகளுக்கும் மதிப்புடன் வாழவும், ஊனமுற்றவராக இருந்தால், கூடுதலான ஆதரவும் உதவியும் பெற உரிமை உள்ளது. ஒரு குழந்தை உடல்நலம் பாதிக்கப்படும் போது, தேவைப்படும் உதவியும் பராமரிப்பும் பெற உரிமையுள்ளது. பள்ளிக்குச் செல்லவும், மற்றவர்களின் உரிமைகளை மதிக்கவும், மற்ற கலாச்சாரங்களை மதிக்கவும் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு பெற குழந்தைகளுக்கு உரிமையுள்ளது. ஒவ்வொரு குழந்தையின் எண்ணங்களும் நம்பிக்கைகளும் மதிக்கப்பட வேண்டும். சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு அவர்களின் சொந்த மொழி, கலாச்சாரம், மதம் ஆகியவற்றைப் பின்பற்ற உரிமையுள்ளது. விளையாடவும், ஓய்வெடுக்கவும், ஆரோக்கியமான சூழலில் வசிக்கவும் குழந்தைகளுக்கு உரிமையுள்ளது. குழந்தைகளின் பள்ளிக் கல்வியில் குறுக்கிடுகிற அல்லது தடுக்கிற, குழந்தைகள் உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய ஆபத்தான தொழில் செய்யும்படி குழந்தைகள் கட்டாயப்படுத்தப்படக் கூடாது. குழந்தைகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தக் கூடாது அல்லது விபச்சாரத்தில் ஈடுபடுத்தக் கூடாது. குழந்தைகள் மோசமாக நடத்தப்பட்டால், பாதுகாப்பும் உதவியும் பெற குழந்தைகளுக்கு உரிமையுள்ளது. குழந்தைகளைக் கடத்தவோ விற்கவோ யாருக்கும் அனுமதியில்லை. குரூரமான, ஆபத்தான முறையில் யாரும் குழந்தைகளைத் தண்டிக்கக் கூடாது. அனைத்துப் பெரியவர்களும், குழந்தைகளும் இந்த ஒப்பந்தம் பற்றி அறிந்திருக்க வேண்டும். மேலும், குழந்தைகள் உரிமைகள் பற்றி அறிந்துகொள்ள குழந்தைகளுக்கு உரிமையுள்ளது.
English
See Rights of the Child Convention.