vaccine

தடுப்பு மருந்தேற்றம்

தமிழ் விளக்கம்

தடுப்பு மருந்தேற்றம் எனப்படுவது உடலில் நோய் எதிர்ப்பாற்றல் திறனைத் தூண்டி, அதன்மூலம் பிற்காலத்தில் ஏற்படக்கூடிய தொற்றுநோயைத் தடுப்பதற்காக உடலினுள் பிறபொருளெதிரியாக்கி ஒன்றைச் செலுத்தி நிருவகிக்கும் முறையாகும். அதாவது சில தொற்று நோய்களிலிருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, நோய் வருவதற்கு முன்னராகவே தடுப்பு மருந்து அல்லது பிறபொருளெதிரியாக்கிப் பதார்த்தத்தைப் பயன்படுத்தும் சிகிச்சை முறையாகும். பல தொற்றுநோய்களுக்கான சிகிச்சை முறையில் தடுப்பு மருந்தேற்றமானது மிகவும் ஆற்றல் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. இங்கு பயன்படுத்தப்படும் மருந்து, உயிருள்ள, ஆனால் பலவீனமாக்கப்பட்ட சில நுண்ணுயிரியாகவோ, அல்லது கொல்லப்பட்ட நுண்ணுயிரியாகவோ அல்லது நுண்ணுயிரியில் இருந்து பெறப்படும் நச்சுப்பொருள் பதார்த்தமாகவோ இருக்கும். இந்தத் தடுப்பு மருந்தேற்றமானது ஊசிமூலமாக உடலினுள் செலுத்தப்படுவதாகவோ அல்லது வாய்மூலம் செலுத்தப்படும் மருந்தாகவோ அமையும். பல நோய்க்காரணிகளால் ஏற்படுத்தப்படும் தொற்று நோய்களின் தாக்கம் இந்தத் தடுப்பூசி முறையால் கட்டுப்படுத்தப்படும். இன்ஃபுளுவென்சா, கருப்பப்பை வாய்ப் புற்றுநோய், சின்னம்மை போன்ற பல தீ நுண்மத்தால் ஏற்படும் தொற்றுநோய்கள் இப்படிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. 1796 இல் எட்வார்ட் ஜென்னர் என்பவரால் இந்தத் 'தடுப்பூசி' என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. பின்னர் லூயி பாஸ்ச்சர் தனது நுண்ணுயிரியல் ஆய்வுகளில் தொடர்ந்து இந்தப் பதத்தை பயன்படுத்தி வந்தார். முதன் முதலில், பசுக்களில் தீவிரமில்லாத ஒரு வகை அம்மை நோயை ஏற்படுத்தும் ஒரு தீ நுண்மத்தில் இருந்து பெறப்பட்ட தடுப்பு மருந்து, மனிதரில் தீவிர தொற்றும் தன்மையும், இறப்பை ஏற்படுத்தும் அளவுக்கு அபாயமானதுமான சின்னம்மை நோயைக் கட்டுப்படுத்தப் பயன்பட்டது. உடலினுள் பாதிப்பை விளைவிக்கவல்ல ஒரு பொருள் செலுத்தப்படுவதனால் இந்த மருத்துவ முறையைப் பற்றிய சர்ச்சைகளும், விவாதங்களும் தொடர்கின்றன.

English

A preparation used to increase the body's resistance to a specific disease.