whooping cough

கக்குவான் இருமல்

தமிழ் விளக்கம்

நுரையீரலில் ஏற்படும் கடுமையான நுண்ணுயிர் தொற்று நோயே கக்குவான் இருமல் ஆகும். அடக்கமுடியாத கடுமையான இருமலால் மூச்சுமுட்டு உண்டாகும். பலமுறை தொடர்ந்து இருமும்போது, இழுத்து மூச்சு விட நேர்வதால் இழுப்பொலி உண்டாகிறது. இது பெரும்பாலும் பிறந்த மற்றும் இளம்பிள்ளைகளைத் தாக்குகிறது. குறிப்பாக ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இது ஆபத்தானது. போர்டெட்டெல்லா பெர்ட்டியூசிஸ் என்ற பாக்டீரியாவால் கக்குவான் இருமல் உண்டாகிறது. காற்றுப்பாதையின் உட்சுவரை பாக்டீரியா / நுண்ணுயிரிகள் பாதிக்கின்றன. நுரையீரலில் இருந்து பிரியும் இருபெரும் மூச்சுக் குழாய்களிலும், மூச்சுக்குழலிலும் தொற்றேறி நோயறிகுறிகள் வெளிப்பட, ஆறிலிருந்து இருபது நாட்கள் ஆகின்றன. இது நோயரும்பும் காலம் எனப்படும். கக்குவான இருமலின் முக்கிய அறிகுறிகள் திடீரென்று ஏற்படும் அடக்கமுடியாத இருமல், மூச்சிழுப்போசை, இருமலுக்குப்பின் வாந்தி.
கக்குவான் இருமலின் பிற அறிகுறிகளில் அடங்குவன: மூக்கொழுகுதல் அல்லது மூக்கடைப்பு, தும்மல், கண்களில் நீரொழுகுதல், உலர்ந்த, உறுத்தும் இருமல், தொண்டைவலி, உடல்சூடு அதிகரித்தல்
சிகிச்சை: தொற்றேறி முதல் மூன்று வாரத்துக்குள் (21 நாட்கள்) கக்குவான் இருமல் கண்டறியப்பட்டால் நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள் கொடுக்கலாம். அதிகமான அளவுக்கு ஓய்வு எடுக்க வேண்டும் நீர்ச்சத்து குறைவதைத் தடுக்க ஏராளமான நீராகாரம் அளிக்க வேண்டும். இருமும்போது வெளிப்படும் அதிகப்படியான சளியையும் வாந்தியையும் உடனுக்குடன் அகற்ற வேண்டும் இல்லையேல் இவை உள்ளிழுக்கப்பட்டு மூச்சுத் திணறல் ஏற்படநேரிடும்.
தடுப்பு முறை: 6, 10, 14 மாதங்களில் மூன்று தடவைகளாகவும், 16-24 மாதங்களிலும் 5-6 வயதிலும் செயலூக்கியாகக் கொடுக்கப்படும் தடுப்பு மருந்தே கக்குவான் இருமலுக்கு உரிய தடுப்பு முறையாகும்.

English

See pertussis.