work-in

உள்ளிருப்பு வேலைநிறுத்தம்

தமிழ் விளக்கம்

தொழிலாளர்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்கத் தொழிலாளர்கள் பயன்படுத்தும் ஒரே ஆயுதம்தான் வேலை நிறுத்தம். வேலை நிறுத்தம் என்பது தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து வேலையை நிறுத்தி வைத்தல் ஆகும். தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தின் மூலம் நிருவாகத்தைப் பணிய வைத்துத் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். ஜெர்மனி, பிரான்சு போன்ற நாடுகளைப் போன்று இந்தியாவிலும் வேலை நிறுத்தம் செய்யும் உரிமை முழுமையானது அல்ல. ஒரு தொழிற்சாலையில் வேலை நிறுத்தம் செய்வதற்கு முன்பும், செய்யப்பட்ட பின்பும் கடைப்பிடிக்க வேண்டிய நிபந்தனைகளும் கட்டுப்பாடுகளும் அதிகமாக இருக்கின்றன. அவற்றைப் பின்பற்றாவிட்டால் வேலை நிறுத்தம் சட்டவிரோதமாகி விடும்.
வேலை நிறுத்தத்திற்கென்று குறிப்பிட்ட வகைகள் எதுவுமில்லை. இருப்பினும் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காகச் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு பல வழிமுறைகளைக் கையாளுகின்றனர். இதனடிப்படையில் வேலை நிறுத்தம் கீழ்க்காணும் வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.
பொது வேலை நிறுத்தம்: நாடு முழுவதும் அல்லது மாநிலம் முழுவதும் ஒரே தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் அனைவரும் தங்களின் பொதுவான கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரே நேரத்தில் செய்யும் வேலை நிறுத்தம் பொது வேலை நிறுத்தம் எனப்படுகிறது.
அடையாள வேலை நிறுத்தம்: தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளைக் கண்டு கொள்ளாமல் இருக்கும் நிருவாகங்களுக்குத் தங்களின் ஒற்றுமையை உணர்த்துவதற்காகவும், தங்கள் கோரிக்கைகளைத் தொடர்ந்து கவனிக்காமல் விட்டால் தொடர் வேலை நிறுத்தம் செய்யப்போவதன் அடையாளமாகவும் ஒரு நாள் முழுவதும் அல்லது ஒரு மாற்று முறையில் மட்டும் வேலை நிறுத்தம் செய்வது அடையாள வேலை நிறுத்தம் எனப்படுகிறது.
உள்ளிருப்பு வேலை நிறுத்தம்: தொழிற்சாலைக்கு உள்ளே இருந்து கொண்டு வேலை செய்ய மறுக்கும் அல்லது மெதுவாக வேலைசெய்யும் நிலைக்கு உள்ளிருப்பு வேலை நிறுத்தம் என்று பெயர்.
அனுதாப வேலை நிறுத்தம்: ஒரு தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் மற்றொரு தொழிற்சாலையில் நடக்கும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வது அனுதாப வேலை நிறுத்தம் எனப்படுகிறது.
உண்ணாவிரதப் போராட்டம்: தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதியான முறையில் உண்ணாவிரதம் இருந்து கோரிக்கைகளை நிறைவேற்றுவது உண்ணாவிரதப் போராட்டம் எனப்ப்டுகிறது.
சட்டப்படியான வேலையை மட்டும் செய்யும் போராட்டம்: சாதாரணமாகத் தொழிலாளர்கள் தங்கள் வேலையைச் செய்யும்போது அதனோடு தொடர்புடைய மற்ற வேலைகளையும் செய்வார்கள். ஆனால் இவ்வகையான வேலை நிறுத்தத்தின் போது தங்களுக்கு இடப்பட்ட சட்டப்படியான வேலையை மட்டும் அவர்கள் செய்வதால் வேலை தாமதமாகி உற்பத்திக் குறைவு ஏற்படுகிறது. இவ்வகை வேலை நிறுத்தம் பொதுப்பணிகளில் அதிகம் நடைபெறும்.
முற்றுகைப் போராட்டம்: தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும்வரை அந்நிறுவனத்தின் முதலாளி அல்லது நிருவாகியை ஓரிடத்திலிருந்து செல்ல விடாமல் தடுத்து அவரைச் சுற்றி அமர்ந்து முற்றுகையிடுவதாகும். ஆனால், இது ஒரு நபரை அவருடைய பணியைச் செய்யவிடாமல் சட்டவிரோதமாகத் தடுத்துச் சிறை வைப்பது போன்றதாகக் கருதப்படுவதால் இது சட்டத்தின் மூலம் தண்டிக்கக்கூடியதாகவும் இருக்கிறது.

English

A planned and coordinated activity by groups of employees who report to their jobs as usual but do not fulfill their usual responsibilities. Usually the goal is to protest some workplace grievance while reducing the risk of being replaced by other workers.