zakat
ஸகாத்
தமிழ் விளக்கம்
இஸ்லாம் ஐந்து அம்சங்கள் மீது நிறுவப்பட்டுள்ளது. 1. உறுதியான நம்பிக்கை - அல்லாவைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாவின் தூதர் என்றும் உறுதியாக நம்புவது. 2. தவறாமல் தொழுவது. 3. (கடமைப்பட்டவர்கள்) ஸகாத் வழங்குவது. 4. (இயன்றோர் இறையில்லம் கஅபாவில்) ஹஜ் செய்வது. 5. ரமலானில் நோன்பு நோற்பது. ஸகாத் இஸ்லாத்தின் முக்கிய நம்பிக்கையாகும். முஸ்லிம்கள் தங்களுடைய செல்வத்திலிருந்து குறிப்பிட்ட விகித்தாச்சார அடிப்படையில் வழங்க வேண்டிய கட்டாய தர்மத்திற்கு ஸகாத் என்று பெயர். ஸகாத் என்ற அரபி வார்த்தைக்கு வளர்ச்சியடைதல், அதிகமாகுதல், தூய்மைப்படுத்துதல் போன்ற பல அர்த்தங்கள் உள்ளன. அல்லாவினால் பரிந்துரைக்கப்பட்ட இந்த ஸகாத்தை வழங்குவதின் மூலம் வழங்குபவருடைய செல்வமும் உள்ளமும் பரிசுத்தமாகிறது என்பதும், இம்மையிலும் மறுமையிலும் பாக்கியங்களை அல்லா அதிகப்படுத்துகிறார் என்பதும் இறை நம்பிக்கை. ஸகாத் என்பது செல்வ வசதி படைத்த ஒவ்வொரு முஸ்லிமான ஆணும், பெண்ணும் நிறைவேற்ற வேண்டிய கட்டாயக் கடமையாகும். நபி (ஸல்) அவர்களின் ஏராளமான ஹதீஸ்களும், திருமறை வசனங்களும் ஸகாத் கட்டாயக் கடமை என்பதைப் பல்வேறு கோணங்களில் எடுத்துரைக்கின்றன.
English
Giving charitable donations, a requirement of those faithful to Islam; that portion of a Muslim's income that must be allocated for alms to poor people. See also tzedakah.